மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

டெங்குவுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்: தமிழிசை

டெங்குவுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்: தமிழிசை

டெங்கு பாதிப்பின் நிலை கருதி மத்திய அரசிடம் தமிழக அரசு உதவி கேட்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தினந்தோறும் பலர் பலியாகி வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதற்கான தகவல்கள் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், வாரந்தோறும் வியாழக்கிழமை அரசு அலுவலகங்களில் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அதிமுக அரசு, தங்களுடைய உட்கட்சிப் பிரச்னையை மட்டுமே கவனித்துவருவதாகவும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 7) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “பரோலில் சசிகலா வந்திருப்பதால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது. விவசாய நிலங்களில் பாதிப்பின்றி பொது இடங்களில் கெயில் கியாஸ் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தப்படும். தமிழகத்தில் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. டெங்குவைவிடப் போலி மருத்துவர்கள் சிகிச்சை அபாயகரமானது. டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலைக் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் அவசரநிலை கருதி மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon