மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

இந்தியப் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பில்லை!

இந்தியப் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பில்லை!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவிகிதமாகக் குறைந்தது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் குறைக்காது என்று ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாடு ஜங்கர் தெரிவித்துள்ளார். இதேபோல, கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உலக வங்கியின் தலைவர், ஜிம் யோங் கிம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சித் தடை என்பது தற்காலிகமானது, இது சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டதாகும் என்று கூறியிருந்தார்.

இந்திய, ஐரோப்பிய ஒன்றிய வணிக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய ஜீன் கிளாடு ஜங்கர், "இந்தியாவுக்கு வெளியே யாரும் 5.7 என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வேகம் குறைவு என்று கூறவில்லை. ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார நிலைகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. இந்தியா 5.7 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட 2 சதவிகிதம் குறைவாகவே உள்ளது" என்று கூறியுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களே இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களே மோடியைக் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக யஷ்வந்த் சின்ஹா அண்மையில், ”நான் இப்போது பேச வேண்டும்” என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டித்து மோடி தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon