மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஜி.எஸ்.டி. வரி: அரவிந்த் சாமி கிண்டல்!

ஜி.எஸ்.டி. வரி: அரவிந்த் சாமி கிண்டல்!

ஜி.எஸ்.டி. வரி கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியான அறிவிப்பைக் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 22ஆவது கூட்டம் அக்டோபர் 6ஆம் தேதி (நேற்று) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கின் செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும், ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கில் இருக்கும் குறைபாடுகள், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், வரிக் குறைப்பு தொடர்பாக எழுந்த பல்வேறு கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 27 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏ.சி. வசதியுடைய ஹோட்டல்களுக்கான சேவை வரியை 18 சதவிதத்திலிருந்து குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியைக் குறிப்பிட்டு அரவிந்த் சாமி நேற்றிலிருந்து (அக்.6) இன்று வரை (அக்.7) தொடர்ச்சியாகப் பல கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

முதல் பதிவாக, "இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, "யாராவது முழு விவரங்களைப் படித்தீர்களா? இது முறுக்கு, காராச்சேவுக்கும் பொருந்துமா? தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" என்று பதிவிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் "சினிமா டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி. இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைப்பு. இதை `அனுமானமான கூட்டு சேமிப்பு திட்டம்’ என விளம்பரப்படுத்தலாம்"

அதற்கடுத்த ஒரு மணி நேரத்தில், "5 சதவீத ஜிஎஸ்டி என்பதால் அதிக தின்பண்டம் சாப்பிட்டுவிட்டேன். உடல்நலம் சரியில்லை. மருத்துவரிடம் சென்றால் அதிக கட்டணம். ஏன் என்று கேட்டால் ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தக் கருவிகளுக்கு 12 சதவித ஜிஎஸ்டி என்றார். அப்படியா?." என்றும் பதிவிட்டிருந்தார்.

இன்று காலை, "நான் விரும்புவது 1 இந்தியா, 1 வரி. மாநிலங்கள் தனியாக கூடுதல் வரிகள் விதிக்கக் கூடாது. அதிகபட்சம் 3 நிலை வரிகள். போகப் போக ஒரே வரி. எளிதாக வருமான வரி தாக்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon