மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

காருக்குள் சிக்கிய குழந்தைகள் பலி!

காருக்குள் சிக்கிய குழந்தைகள் பலி!

டெல்லியில் காருக்குள் சிக்கிய குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரன்ஹோலா பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 3) வெளியூர் சென்றிருந்த அவரது குடும்பத்தார் காரில் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். ஆனால் காரை லாக் செய்ய மறந்துவிட்டனர்.

வெயிலில் விளையாடிக்கொண்டிருந்த ராஜுவின் குழந்தை சோனு (4), அவரது உறவினர் மகன் ராஜ் (5) ஆகிய இருவரும் காரில் ஏறியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் கதவு மூடாமல் இருப்பது ராஜுவுக்கு நினைவுக்கு வந்துள்ளது. மதியம் 1.15 மணியளவில், ராஜு காரை எலக்ட்ரானிக் கீ மூலம் வீட்டு பால்கனியில் இருந்தே லாக் செய்துள்ளார். அப்போது குழந்தைகள் காரின் பின் சீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

3 மணியளவில் குழந்தைகள் வீடு திரும்பாததைக் கண்டு குடும்பத்தார் தேடத் தொடங்கியுள்ளனர். மாலை 7 மணி ஆகியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதனால், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் ஒரு காரில் அனைவரும் ரன்ஹோலா காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இரவு 10 மணி அளவில், விசாரணை அதிகாரி குடும்ப உறுப்பினர்களை வீட்டிற்குச் சென்று குழந்தைகளின் புகைப்படங்களைக் கொண்டுவரும்படி கேட்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள், மற்றொரு காரில் வேறு இடங்களுக்கு தேடச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். காரை திறந்தபோது காருக்குள் குழந்தைகள் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். குழந்தைகளை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கி சென்றுள்ளனர். குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் மூச்சுத் திணறல் மற்றும் வெப்பம் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம், டெல்லி ராணி பாக் பகுதியைச் சேர்ந்த சோனு (8 ) என்னும் சிறுவன் காருக்குள் சிக்கி உயிரிழந்தான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். காரில் பயணம் செய்யும்போது வெளிப்புறத்தில் 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர்கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாகக் குறையும். ஆனால், கார் நின்ற அடுத்த 10 நிமிடங்களில் வெப்ப நிலை 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும். மேலும், உடலில் நீர் வற்றிக் குழந்தைகளுக்கு பக்கவாதம் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாய் முடியும்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon