மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

100 குற்றவாளிகளைக் கைதுசெய்த எஸ்.பி.

100 குற்றவாளிகளைக் கைதுசெய்த எஸ்.பி.

கடலூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ். கைது விஷயத்தில் சதமடித்துள்ளார். கொலை, கொள்ளை முதலான குற்றங்களைச் செய்தவர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள், மணல் கொள்ளையர்கள் என நூறு குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பெருகிவந்த கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த, வெளியூர், உள்ளூர், வெளி மாநில ரவுடிகள் பட்டியலைத் தயார்செய்தார் விஜயகுமார். அடுத்து, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அலசி ஆராயத் தொடங்கினார். கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதுச்சேரி, சேலம், சென்னை, தஞ்சாவூர், திருவாரூர் திருச்சி ஆகிய இடங்களுக்குச் சிறப்புப் பிரிவு போலீசாரை அனுப்பி, அந்த இடங்களில் இருந்த ரவுடிகளைப் பிடித்துவரச் செய்தார். இந்த அணியினர், மாநிலம் முழுவதும் ரவுடிகளைச் சல்லடை போட்டு அலசித் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் சமர்ப்பித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களைச் சிறைக்கு அனுப்பியுள்ளார் எஸ்.பி. விஜயகுமார்.

இப்படி இதுவரையில் நூறு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் மாவட்டத்தில் குற்றம் குறைந்துள்ளது என்கிறார்கள் கடலூர் மாவட்டக் காவல் துறையினர். குறிப்பாகப் புதுச்சேரியைச் சேர்ந்த கூலிப்படையினர் அன்பு, சூரியா, புகழேந்தி, அமுதன் ஆகியோர் உட்பட 40 ரவுடிகளையும் பிடித்துள்ளார்கள். விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் பிடித்த இதர குற்றவாளிகளில் சிலரது விவரம் வருமாறு:

* தமிழகக் காவல் துறையில் ஹிட் லிஸ்ட்டில் உள்ள சென்னையை சேர்ந்த பிரபலமான ரவுடி சங்கர்லால்;

* சேலம் மாவட்டத்தைக் கலக்கிய கூலிப்படையினர் சுரேஷ், ராஜா, கந்தன்;

* தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாடலி, சதாசிவம், பாபு, சித்திரகுமார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரடி கார்த்திக் இவர்கள் மீது பலமாவட்டங்களில் கொலை வழக்குகளும், கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இப்படிப்பட்ட குற்றவாளிகள் நூறு பேரைத் தேடிப் பிடித்துக் கைது செய்திருப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்குக் காவல் துறை வட்டாரங்களிலிருந்தும், மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon