மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

விவசாயம்: அதிகரிக்கும் மண் நல அட்டைகள்!

விவசாயம்: அதிகரிக்கும் மண் நல அட்டைகள்!

மண் நல அட்டைகள் வழங்கும் திட்டம் நன்றாக முன்னேறி வருகிறது. அதேசமயம் விவசாயத்திற்கான ஆட்கள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, இணைய இணைப்பு போன்ற பிரச்னைகள் இருப்பதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மண் நல அட்டைகள் வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 கோடி விவசாயிகளுக்கு இந்த அட்டைகளை வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மண்ணின் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், மண் ஊட்டச்சத்தின் சரியான அளவு மற்றும் மண் வளத்தை அதிகரிக்கத் தேவையான ஆலோசனைகள் போன்றவற்றை இதன்மூலம் விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும்.

இந்தத்திட்டம் குறித்து தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: "இந்தத் திட்டத்தின் மொத்த விளைவுகள் நேர்மறையான மாற்றத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டம் அதிகபட்சமான வளர்ச்சியை அளிப்பதோடு, செலவையும் குறைக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மனித வளத்தின் இடைவெளியையும் குறிப்பிடுகின்றன. விவசாயத் துறையில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்கள் மண் மாதிரிகளை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்கின்றனர். தற்போது நீர்ப்பாசன பகுதிகளில் 2.5 ஹெக்டேர் பரப்பளவிலும், நீர்ப்பாசனமற்ற பகுதிகளில் 10 ஹெக்டேர் பரப்பளவிலும் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த மண் பரிசோதனைகள் தாலுக்கா அளவிலும் நடத்தப்படுகின்றன.

மண் நல அட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு கார்டுகள் அச்சடிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு அட்டைக்குப் பெறப்படும் தொகை ரூ.190லிருந்து ரூ.325ஆக உயர்த்தப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, 19 மாநிலங்களில் உள்ள 76 மாவட்டங்களில், 170 மண் சோதனை ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon