மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ரீமா கல்லிங்கல்: ஆண்களைக் காப்பாற்ற வேண்டும்!

ரீமா கல்லிங்கல்: ஆண்களைக் காப்பாற்ற வேண்டும்!

கேரளாவைச் சேர்ந்த யாராவது இந்த செய்தியைப் படிக்க நேர்ந்தால், முதலில் உங்கள் மாநிலத்து ரசிகர்களை கண்டித்துவிட்டுப் பிறகு வாருங்கள் எனச் சொல்லக்கூடும். எனவே, ரசிகர்கள் என்ற போர்வையில் எதிர்விமர்சனம் செய்பவர்களையும், பெண்களைத் தகாத வார்த்தைகளைச் சொல்லி வசைபாடுபவர்கள் உலகின் எந்த இடத்தில், எந்த மொழி சார்ந்த ரசிகர்களாக இருந்தாலுமே தவறு என்பதைப் பதிவு செய்துவிட்டு செய்தியைத் தொடங்குவோம்.

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் திலீப். அவரது ரசிகர்களின் ஆட்டம் கொஞ்சமானது அல்ல. சிறை வாசலிலேயே திலீப்பைத் தியாகிபோலப் பாவித்து, அவரது ஜாமீனுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். அப்போதும்கூட, தனக்குப் பிடித்த நடிகன் தவறு செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அப்படி ரியாக்ட் செய்ததாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், தற்போதைய அவர்களது ஆன்லைன் பிரச்சாரங்கள் மிகவும் கண்டிக்கவேண்டியதாக மாறியுள்ளது.

திலீப்பின் ரசிகர்களால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது ஒரு போஸ்டர். அதில், எல்லாப் பெண்ணியவாதிகளுக்கும் திலீப் திரும்ப வந்துவிட்டதைச் சொல்லிக்கொள்கிறோம். ஸ்கெட்ச் இங்கிருந்து தொடங்குகிறது. அவருக்கு எதிராகப் பேசும் யாராக இருந்தாலும் மொபைலில் படமாக்கப்படுவீர்கள் என்று எழுதியிருக்கிறது. இப்படியொரு பகிரங்க மிரட்டல் கொடுப்பதற்காகத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் கேரள அரசு இருக்கிறது.

சமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் அறிக்கைக்குப் பதில் சொன்ன பினராயி விஜயன் தவறான தகவல் பரவச் செய்த அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதி மீது வழக்கு பதிவு செய்தவர்கள் எங்கள் காவல் துறையினர் எனக் கூறியிருந்தார். அந்த பதிலை உண்மையாக்க இப்போது இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திலீப் ரசிகர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்த்து நடிகை ரீமா கல்லிங்கல் பதிவு செய்திருக்கும் ஃபேஸ்புக் பதிவில், “இத்தகைய ஆண்களுடன் நாம் வாழ்கிறோம் என நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. இவர்களுடன்தான் நாம் வாழ வேண்டும். இவர்களுடன்தான் நாம் காதல் கொள்ள வேண்டும். இவர்களுடன்தான் நாம் சாப்பிட வேண்டும். இவர்களுடன்தான் நாம் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைக்கும்போதே பயமாக இருக்கிறது. உண்மையான ஆண் என்பது, பெண்களை அடக்கி ஆள்வதில் இல்லை. அவர்களுக்கு உருவாகும் அனைத்துப் பிரச்சினைகளிலும் ஆதரவாக இருப்பதுதான். இப்போது ஆண் சமுதாயத்துக்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, பெண்களாகிய நாம் ஆண்களுடன் நிற்க வேண்டும். உண்மையான ஆண்கள் இவர்களைப் போன்றவர்களால் பாதிக்கப்பட்டுவிடாமல் காப்பாற்ற வேண்டும்”. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon