மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: ‘என்னை நினைச்சு கவலைப்படாதீங்க...’ !

டிஜிட்டல் திண்ணை: ‘என்னை நினைச்சு கவலைப்படாதீங்க...’ !

கணவரிடம் உருகிய சசிகலா

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ்தான் முதலில் வந்தது.

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தது தொடங்கி தி.நகரில் இளவரசி மகள் வீட்டுக்குள் போகும் வரை லைவ் கொடுத்த சேனல் ஜெயா டிவி மட்டுமே. பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த காருக்கு முன்பாக ஜெயா டிவியின் ஓ.பி வேன் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

பரோலுக்கு முதல் நாள் ஜெயா டிவியின் எடிட்டோரியல் மீட்டிங்கில் இளவரசி மகன் விவேக் பேசி இருக்கிறார். ‘சின்னம்மா பெங்களூருல இருந்து கிளம்புறது தொடங்கி, இங்கே வந்து சேரும் வரைக்கும் லைவ் அடிக்கணும். எந்த இடத்திலும் சின்னம்மா ஜெயில்ல இருந்து பரோலில் வர்றாங்க என்ற வார்த்தை வந்துவிடக் கூடாது. பெங்களூருவில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார் சின்னம்மா என்று மட்டும்தான் வாசிக்க வேண்டும். ஓபி வேனில் எங்கெல்லாம் சிக்னல் கட் ஆகுதோ அப்போதெல்லாம் சின்னம்மாவின் சாதனை குறித்த செய்தித் தொகுப்பு மட்டும்தான் ஒளிபரப்பாக வேண்டும். அதுக்கு தகுந்த மாதிரி செட் பண்ணிக்கோங்க.

வழியில் நிறைய தொண்டர்கள் நிற்பாங்க. மக்களும் இருப்பாங்க. சின்னம்மாவைப் பார்த்ததும் அவங்க எமோஷனலா கத்திட்டு காரை நோக்கி ஓடி வருவாங்க.. அதெல்லாம் லைவ்ல வரணும். வண்டிக்கு மேல மூணு கேமராகூட செட் பண்ணி உட்கார சொல்லிடுங்க. காருக்கு மேல உட்காரும் கேமராமேன்களை கவனமாக உட்கார சொல்லுங்க...’ என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்திருக்கிறார் விவேக்.

அதன்படிதான் நேற்று ஜெயா டிவியில் லைவ் போனது. எந்த இடத்திலும் தப்பித்தவறிக்கூட சசிகலா பரோலில் வருகிறார் என்பதை அவர்கள் சொல்லவே இல்லை. ஏதோ பெங்களூரு டூர் போய்விட்டுத் திரும்பி வருகிறார் என்பதைப் போலத்தான், சின்னம்மா பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

முதலில் விமானத்தில் வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்ததால், தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உடனடியாக சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு கிருஷ்ணகிரியிலிருந்து தொடங்கி தி.நகர் வரையிலுமே வழி நெடுகக் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். அதுவும், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி பகுதிகளில் சாலையில் இருபுறங்களிலும் நின்ற தினகரன் ஆதரவாளர்கள் கூடை நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு சசிகலா வரும் காரின் மீது தூவி வரவேற்றார்கள்.

முதலில், எம்ஜிஆர் இல்லம், அடுத்து ஜெயலலிதா சமாதிக்குப் போக வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். ஆனால், பரோல் விதிமுறைகளில், மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது எனச் சொல்லப்பட்ட காரணத்தால், அந்தத் திட்டம் ரத்தானது.

நேராக தி.நகர் வீட்டுக்கு வந்தார் சசிகலா. அங்கே ஏராளமான அதிமுகவினர் குவிந்திருந்தனர். காரில் இருந்தபடியே எல்லோருக்கும் வணக்கம் மட்டுமே சொன்னார். யாரைப் பார்த்தும் உற்சாகமாகக் கையசைக்கவில்லை. தி.நகர் வீட்டை நெருங்கும்போதுதான் சசிகலாவின் கார் கண்ணாடி இறங்கியது. காருக்குள் லைட்டும் பிரகாசமாக எரிந்தது. சிரித்தபடியே எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்ததது.

“நேற்று இரவு இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சமையல் செய்திருக்கிறார். சசிகலாவுக்கு மிகவும் பிடித்த செட் தோசையும் வடகறியும் இரவு உணவாக சமைக்கப்பட்டிருக்கிறது. புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகள் எதுவும் வேண்டாம் என சொல்லியிருந்தாராம் சசிகலா. அதனால், தோசை, தயிர் சாதம் மட்டும் நேற்று இரவு உணவாக எடுத்துக்கொண்டாராம்.

இன்று காலை 9.20 மணிக்கு, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தி.நகரில் உள்ள சசிகலா தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து இளவரசியின் மகன் விவேக் வந்தார். அவர்களோடு சேர்ந்துதான் இன்று காலையில் சாப்பிட்டிருக்கிறார் சசிகலா.

காலை 9- 10.30 மணி வரை ராகு காலம் என்பதால் அது முடிந்த பிறகு வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கிளம்பலாம் எனச் சொல்லி இருக்கிறார் சசிகலா. சரியாக 10.57 மணிக்கு தி.நகர் வீட்டில் இருந்து குளோபல் மருத்துவமனையை நோக்கி சசிகலாவின் கார் கிளம்பியது. தி.நகரில் இருந்து சைதாப்பேட்டை, மத்திய கைலாஷ் வழியாக அடையாறு, ஈ.சி.ஆர். சாலையில் குளோபல் மருத்துவமனையை நோக்கிப் போனது சசிகலாவின் கார். விவேக், ஜெய் ஆனந்த் இருவருமே சசிகலாவுடன் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

மருத்துவமனையில், நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் எல்லோருமே சென்றார்கள். ஆனால், சற்று நேரத்துக்குப் பிறகு, எல்லோருமே வெளியே வந்துவிட்டார்கள்.

சசிகலா மட்டுமே கணவர் நடராஜனுடன் இருந்திருக்கிறார். ‘நீங்க பேசுங்க. ஆனால், அதிகம் அவரை தொந்தரவு கொடுக்காமல் பேசுங்க...’ என மருத்துவர்கள் சசிகலாவிடம் சொன்னார்களாம். சசிகலாவைப் பார்த்ததுமே நடராஜன் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்திருக்கிறது. சசிகலாவும் அவருக்கு அருகே போய் நின்றது கடகடவென அழ ஆரம்பித்துவிட்டாராம். உடன் இருந்தவர்கள்தான், ‘நீங்க அழுதா அவரும் தாங்க மாட்டாரு... அழாதீங்க... அவருக்கு நீங்கதான் தைரியம் சொல்லணும்..’ என்று சொல்லித் தேற்றிவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.

நடராஜன் படுக்கைக்கு அருகே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவர் மதியம்வரை எழுந்திருக்கவே இல்லையாம். வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவையும், அங்கேயேதான் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறார் சசிகலா. நடராஜனால் இயல்பாகப் பேச முடியவில்லை. சசிகலா பேசுவதற்கு மட்டும் தலையை ஆட்டியபடி இருந்திருக்கிறார். ‘என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க. நான் நல்லா இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன்..’ இதைத்தான் நடராஜனிடம் சசிகலா திரும்பத் திரும்பச் சொன்னதாகச் சொல்கிறார்கள். இப்படியாகத்தான் சசிகலாவின் இன்றைய முதல் நாள் கழிந்தது” என்ற அடுத்த மெசேஜ்க்கும் செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

சனி, 7 அக் 2017

அடுத்ததுchevronRight icon