மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ராமானுஜரும் 74 -ம்!

 ராமானுஜரும் 74 -ம்!

விளம்பரம்

ஆளவந்தாரிடம் இருந்து நேரடியாக எந்த உபதேசத்தையும் பெறவில்லை ராமானுஜர். ஆனால், அவர் நினைத்த முப்பெரும் இலட்சியங்களை நிறைவேற்றினார். அதுமட்டுமல்ல, ஆளவந்தார் தனக்கு நேரடியாக உபதேசித்திருந்தால் என்ன அறிவுச் செல்வங்களை அடைந்திருப்பாரோ, அதை ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் மூலம் அடைந்தார் ராமானுஜர்.

அதுமட்டுமல்ல... ஆளவந்தாரின் சீடர்களை விட, அவரது கிரந்தங்களைப் படித்து அதன் மூலமாகவும் பல வைணவத் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டார் ராமானுஜர்.

இதை ராமானுஜரே தன் எழுத்துமூலமாக தெரிவித்துள்ளார். ராமானுஜர் அருளிய வைகுண்ட கத்ய மங்கள சுலோகம் என்ற கிரந்தத்தில் , ‘ஆளவந்தார் என்கிற அமிர்தக் கடலில் மூழ்கி எழுந்து நான் பக்தி யோகம் என்கிற ரத்தினத்தை எடுத்து வந்து காண்பிக்கிறேன்’ என்றார்.

ஆக, ஆளவந்தாரை அமுதக் கடல் என்று வர்ணிக்கிறார் ராமானுஜர். அமுதக் கடலில் மூழ்கி எழுவது எப்படி சுகமோ அதுபோல ஆளவந்தாரை அணு அணுவாக மதித்து, வணங்கி, சரணாகதி அடைந்து அவரின் உபதேசங்களை உள் வாங்கிக் கொண்டிருக்கிறார் ராமானுஜர்.

இந்த இடத்தில் நாம் இன்னொரு முக்கியமான வரலாற்று உண்மையை தொடப் போகிறோம். எம்பெருமானாராகிய ராமானுஜர் தான் ஆச்சாரியராக இருந்தபோதுதான் வைணவத்தைப் பரப்ப, வைணவத்தைத் தழைத்து ஓங்கச் செய்ய வைணவத்தை செழிக்க வைக்க சிம்மாசனாதிபதிகள் என்ற பதவியை உருவாக்கினார்.

நாம் ஏற்கனவே பார்த்தோம். நாதமுனிகள் இருந்தார், ஆளவந்தார் இருந்தார் . ஆனால் அவர்கள் எல்லாம் வைணவ தத்துவத்தில் கரை கண்டவர்கள். ஆனால் வைணவத்தை நிறுவனமயமாக்கி சமுதாயத்தில் வைணவத்துக்கு என கட்டமைப்பை உருவாக்கியவர் ராமானுஜர் மட்டுமே.

அந்த ராமானுஜர் வைணவத்தை நிறுவன மயப் படுத்துவதற்காகவே தன் தலைமயில் 74 சிம்மாசனாதிபதிகள் என்ற ஆச்சாரியர்களை நியமித்தார். அவர்கள் 74 பேரும் பலவேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். அந்த சிம்மாசானாதிபதிகள் தங்கள் பகுதியில் ராமானுஜ சித்தாந்தம் வகுத்துக் கொடுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும், என்பதற்காகவே நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனம் என்பது இன்றளவுக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

74 சிம்மாசனாதிபதிகளில் சிலர் வழி வழியாகவும் சிலர் மடத்து ரீதியாகவும் இன்னும் நீடிக்கிறார்கள். குறிப்பாக திருவரங்கம், காஞ்சிபுரம், ஆழ்வார் திருநகரி, திருப்பதி, அஹோபிலம் என்று இன்றும் வைணவ ஆச்சாரியர்கள் ராமானுஜர் நிர்மாணித்த வைணவத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிம்மாசனாதிபதிகள் மட்டுமல்ல... ஒருமுறை ராமானுஜர் தன் சிஷ்யர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து அவர்களுக்கு எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று 74 வார்த்தைகளை உபதேசித்தார். இதற்கு 74 வார்த்தைகள் என்றே பெயர். இந்த 74 வார்த்தைகளையும் பார்ப்பதற்கு முன்னதாக அதன் சாரத்தை முக்கியமாகப் பார்ப்போம்.

ராமானுஜர் சொல்கிறார்

‘’எம்பெருமானுடைய திருமேனியை கல்லென்று நினைப்பது, ஆசாரியனை சாதாரண மனிதர் என்று நினைப்பது, வைணவனின் ஜாதியை ஆராய்வது, பகவத் பாகவதர்களுடைய திருப் பாத தீர்த்தத்தை வெறும் தண்ணீர் என்று நினைப்பது, பகவத் பாகவதர்களின் பெயர்களை வெறும் எழுத்துகள் என்றும் ஒலிக் குறிப்புகள் என்றும் நினைப்பது, நாராயணனை மற்ற தெய்வங்களோடு ஒப்பிடுவது ஆகியவற்றை எல்லாம் செய்பவன் நரகத்தை அடைவான்’’ என்று சொல்கிறார் ராமானுஜர்.

இதில் முக்கியமான மூன்றாவது வார்த்தையை கவனியுங்கள். வைணவனின் சாதியை ஆராய்பவன் நரகத்துக்குச் செல்வான் என்கிறார் ராமானுஜர்.

ஆக ராமானுஜரைப் பொறுத்தவரை வைணவத்தில் சாதியில்லை. வைணவத்தில் வர்ண பேதமில்லை. வைணவத்தில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை.

ராமானுஜர் சொன்ன வார்த்தைகளும் 74... ராமானூஜர் வைணவ சித்தாந்தத்தை பரப்புவதற்காக நியமித்த சிம்மாசனாதிபதிகள் எனப்படும் வைணவ ஆசாரியர்களும் 74. என்ன இது... ராமானுஜருக்கும் 74-க்கும் என்ன சம்பந்தம்?

இந்த 74 பற்றிய கேள்விக்கு விடைதேடிக் கொண்டே இருங்கள்!

வைணவமும் விவசாயமும் பின்னிப் பிணைந்தது. ராமானுஜர் திருவரங்கத்தில் பத்துக் கொத்து என்னும் கட்டமைப்பை ஏற்படுத்தி கோயில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தியபோது நடந்த ஒரு காட்சியை நாம் இங்கே நினைவு கூர்வோம்.

திருவரங்கத்துப் பெருமாளுக்கு தினம்தோறும் நிவேதனம் செய்வதற்கான அரிசி போன்ற உணவுப் பொருட்களை விளைவிக்கிற வேளாளர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களை ராமானுஜர் வரவேற்கிறார் எப்படி தெரியுமா?

’அனைவருக்கும் அமுது செய்வான் அரங்கன். ஆனால் அந்த அரங்கனுக்கே அமுது செய்வோர் வேளாளர்கள்தான்’ என்று சொல்லியே அவர்களை வரவேற்றார் ராமானுஜர்.

சரி.. இதற்கும் அந்த 74-க்கும் சம்பந்தம் இருக்கிறது. ராமானுஜரைப் பற்றி பலரும் அறியாத இந்த வைணவ- விவசாய ரகசியத்தைக் காண்போம் காத்திருங்கள்!

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் ராமானுஜர் பற்றி பல்வேறு விழாக்கள் நடத்தி வருகிறார். அருளிச் செயல்கள் பற்றி பாமரரும் அறியும் வகையில் பரப்பி வருகிறார். அவர் தொண்டு தொடர்க... ராமானுஜரின் அருள் எங்கும் படர்க!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜரின் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon