மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

சிறப்புக் கட்டுரை: கொசுவாகிய நான்..!

சிறப்புக் கட்டுரை: கொசுவாகிய நான்..!

சிவா

எச்சரிக்கை: இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை.

குறிப்பு: இதில் கூறப்பட்டவை அனைத்தும் கற்பனையே.

அன்றைய காலை வழக்கம்போல்தான் விடிந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை. காலை எழுந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போதே டெல்லி கொசுக்கள் மதுரை, திருச்சியிலிருந்து வரும் ஆம்னி பேருந்துகளின் மூலம் பரவி தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைப் பரப்புவதாக அறிந்தபோது சொல்லவொண்ணாத் துயரத்தை அடைந்தேன். ஏனென்றால், இரவு முழுவதும் கொசுக்கள் கடித்ததன் விளைவால் ஆங்காங்கே வீக்கங்கள் காணப்பட்டன.

அதிகாலையில் டீக்கடைக்குச் செல்வதற்கான காரணமான அந்தப் பெண் பார்த்துக்கொண்டிருந்தபோது என்னையுமறியாமல் சொறிந்துவிட்டதால் ஏற்பட்ட அவமானத்தில் நெஞ்சு வெதும்பியபடியே அலுவலகத்துக்கு வந்தபோது இந்த செய்தியைப் படிக்க நேர்ந்ததால்தான் அத்தனை துயரம்.

இந்தக் கொசுக்களின் அட்டூழியத்தை அடக்கவே முடியாதா? இவற்றையெல்லாம் என்னதான் செய்வது என யோசித்தபோது, ஜனவரி மாதம் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்ற புண்ணியவான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கொசுக்களை ஒழிக்கத் தொடர்ந்திருந்த வழக்கு நினைவுக்கு வந்தது. நீதிமன்றம் கேள்வி கேட்டும் டெல்லியிலிருந்து ஆர்டர் வராததால் வாய் திறவாமல் இருந்த அதிமுக அரசாங்கத்தைக் கண்டித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிவரும் என நீதிபதிகள் எச்சரித்தும் பயனில்லாமல் போய் இப்போது இந்த நிலையில் வந்து நிற்பதை எண்ணி மனம் வெதும்பியது. அரசாங்கத்தை நம்பியது போதும். நாமே களத்தில் இறங்கலாம் என யோசித்து வில்லேஜ் விஞ்ஞானிகள் ‘தெர்மாகோல்’ புகழ் செல்லூர் ராஜு அவர்களையும், ‘சோப்பு நுரை’ புகழ் கருப்பண்ணனையும் வணங்கிக்கொண்டு ஒரு கொசுவை கஸ்டடியில் எடுக்க நானும் சக ஊழியர் சேகரும் முடிவெடுத்தோம். அடுத்த நொடி பாய்ந்து சென்று அறையின் கதவையும் ஜன்னல்களையும் மூடினோம். இரண்டு கொசுக்கள் சிக்கின.

நான் துரத்திச் சென்ற கொசு மின்விசிறியில் அடிபட்டு இறந்துபோனது. சேகர் கச்சிதமாகக் கொசுவைப் பிடித்துவிட்டார். தப்பிச் செல்லாமல் இருக்க ஒரு டம்ளரில் கொசுவை அடைத்துவிட்டு, இறந்துபோன கொசுவைப் புதைக்கச் சென்றோம். ஒருவேளை வழக்குப் பதிவு செய்து போஸ்ட்மார்ட்டம் செய்தால் கொசுவின் உடலிலிருக்கும் நம் ரத்தத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட மாட்டார்களா என்று கேட்டதற்கு சேகர் சொன்னார்: “கொசு ரெண்டு இட்லி சாப்டுச்சு. தொட்டுக்க கெட்டி சட்னி இல்லாததால் ரத்த தானம் செய்தோம் என்று சொல்லிவிடலாம். ஆதாரத்துக்கு கொசுவின் விரலிலிருந்து கைரேகை எடுத்துக்கொள்வோம்” என முடிவெடுத்துக் கைரேகையை ஒரு பேப்பரில் எடுத்துக்கொண்டு தேனே மானே சேர்த்து ஒரு லெட்டரை எழுதி, கஸ்டடியில் இருக்கும் கொசுவிடம் சென்றோம்.

நாங்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பே கொசு பேசியது.

“யோவ் யாருயா நைட்டு ராயல் சேலஞ்ச் குடிச்சது. உங்க போதை எனக்கேறிடுச்சு. நல்ல சரக்கா வாங்கி குடிக்கமாட்டீங்களா?” என்று கேட்ட கொசுவின் வாயை மூடிவிட்டுத் தமிழக அரசின் டாஸ்மாக்கை நினைத்துப் பெருமைப்பட்டோம். பின்பு விசாரணை தொடங்கியது.

நாங்க கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும். நீங்க யாரு? எத்தனை பேரு?

நீங்க சொல்றது சரி. நான் தனி ஆள் இல்லை. எனக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு. அவங்க வந்ததும் இருக்கு கச்சேரி.

உன் கூட்டம் வர்றதுக்கு முன்னாடியே உன் காலை வெட்டி ரத்த சத்து இல்லாம இறந்துட்டன்னு சொல்லி கேஸை முடிச்சிடுவோம். சாட்சிக்கு டெல்லி கொசு வரைக்கும் வரவைப்போம். எப்படி வசதி...

ஐயோ, அந்த டீமா நீங்க? நான் உங்க கேள்விக்குப் பதில் சொல்லிடுறேன். என் மானத்துக்கு எந்த பங்கமும் வராதுன்னு சத்தியம் பண்ணிக் கொடுங்க.

நான் சத்தியம் பண்ணாலே நீ செத்துருவ. விஷயம் அது இல்லை. ஏன் டெங்கு நோயைப் பரப்புறீங்க? உங்களுக்கும் மனித இனத்துக்கும் அப்படி என்ன பகை?

ஒரு நிமிஷம் நான் பேசுறதை அமைதியா கேளுங்க. என் பெயர் ஏடிஸ். மங்கலகரமான பெயர். என் அப்பா வெஜிடேரியன். ரத்தம் குடிக்க மாட்டார். நான் பொறக்குறதுக்காக என் அம்மா ரத்தம் குடிக்க ஸ்டார்ட் பண்ணி அதுக்கப்பறம் அதுவே பழக்கமாகிட்டதா சொன்னாங்க. எனக்கும் ரத்தம் குடிக்கிறதுல உடன்பாடு இல்லை. எல்லா பெண்களைப் போலவும் நான் அப்பா செல்லமாவே வளர்ந்துட்டேன். அம்மா, சாப்பாடு கொண்டுவர போற சமயம் நானும் அப்பாவும் செடிகள்ல இருக்க தண்ணியைக் குடிச்சே பழகுனோம். சென்னை வெயில்ல விளையாடி நான் கறுப்பாகிட்டேன். இதெல்லாம் சரியாகணும்னா நானும் ரத்தம் குடிச்சு எங்க பரம்பரைக்குப் பெருமை சேர்க்கணும்னு அம்மா சொன்னாங்க. அதை நம்பி ரத்தம் குடிக்க வந்து இங்க மாட்டிக்கிட்டேன். என் பாதுகாப்புக்கு வந்த என் அப்பாவைத்தான் இந்தாளு கொன்னுட்டான். நான் வீட்டுக்கு போனதும் அப்பா எங்கன்னு அம்மா கேட்டா நான் என்ன சொல்லுவேன்?

உன் அப்பா இறந்த மாதிரியே எத்தனையோ அப்பாக்கள் இறந்துகிட்டு இருக்காங்க தமிழ்நாட்டுல. அவங்களைப் பத்தி கவலைப்பட்டிருந்தா நீங்க நோய் பரப்பிருக்க மாட்டீங்களே? நீங்க நல்லா சாப்பிட்டு வாழ்றதுக்கு நாங்க உழைச்சு சாப்பிட்டு சேர்த்த ரத்தத்தை உறிஞ்சுறது என்ன மாதிரியான தர்மம்?

ஆங், மனு தர்மம். அடப் போங்கய்யா. ஒரு கொசு கடிச்சு ஒரு மனுஷன் இறக்குறதில்லை. ஆனா, ஒரு மனுஷன் நினைச்சா ஒரு கோடி கொசுக்களை ஒரு நொடில கொல்ல முடியும்.

ஆனா, சாக மாட்டேங்குறீங்களே? விவேகம் அஜித் மாதிரி எழுந்து வந்துகிட்டே இருக்கீங்களே...

யோவ்... நான் விஜய் ரசிகை. வீட்டுக்கு வா அவரோட சேர்ந்து நான் கத்தி பட ஷூட்டிங்ல தண்ணீர் குழாய்க்குள்ள எடுத்த ஃபோட்டோ இருக்கு காட்றேன்.

பேச்சை மாத்தாத... உங்களை கொத்து கொத்தா கொல்லாத எங்களை ஏன் நீங்க கொத்தி கொத்தியே கொல்றீங்க?

நீங்க கொல்லாம ஒண்ணும் இல்லை. கொன்னுட்டோம்னு நினைச்சு ஏமாந்து போறீங்க. வீட்டைச் சுத்தி எலுமிச்சை மரமும், துளசி செடியும் வெச்சு மனிதர்கள் வாழ்ந்த காலத்துலயும், காலைல சாணி தெளிச்சு வாசல் கழுவுனப்பவும், சாயங்காலம் ஆனா வேப்பிலையைக் கொளுத்தி புகை போட்டு விளையாடிக்கிட்டு இருந்த காலத்துலயும் டெங்குவுக்கும் மலேரியாவுக்கும் செத்தவங்க இருந்தாங்களா?

உங்களையெல்லாம் சாகடிக்கவே முடியாதா?

ஏன் முடியாது. முட்டைல இருக்கும்போதே எங்களை கட்டுப்படுத்துறதுக்குத்தான், நாங்க பொறக்குற தேங்கி இருக்க தண்ணிலயே தவளைகளையும் இயற்கை உருவாக்குச்சு. தலைப்பிரட்டைகளுக்கு சாப்பாடே நாங்கதான். ஆனா, பாத்ரூம் கழுவ, பாத்திரம் கழுவ, வீடு கழுவன்னு எல்லாத்துக்கும் ஆசிட்டை பயன்படுத்தி முட்டைல இருந்து வர்ற தவக்களை குட்டிகளை(தலைப்பிரட்டை) சாகடிச்சிட்டீங்க. நாங்க தண்ணிக்கு மேல ஜாலியா இருந்தோம். இதுதான் நீங்க அறுத்த உயிர் சங்கிலி. கொசுக்களை கொல்றது தப்புன்னு ஜீவகாருண்யம் பேசிக்கிட்டு திரியுறீங்க.

நாங்களே மறந்துட்ட விஷயம் உனக்கெப்படி தெரியுது?

நான் எம்.ஏ. வரலாறு படிச்சிருக்கேன். நீங்க மாடர்ன் வாழ்க்கைன்னு சொல்லி கொசு, ஈ, கரப்பானை விரட்ட ஸ்பிரேவோட கிளம்புனீங்க. அந்த கம்பெனிகாரனுக்கு இருக்க ஒரே நம்பிக்கை நாங்கதான. எங்களை எப்படி கொல்லுவான்? மயக்கம் போட்டு விழற அளவுக்கு கெமிக்கலை பயன்படுத்தி எங்களைக் காப்பாத்துன தெய்வம்யா அவங்க. நாங்களும் நைட் டியூட்டி முடிஞ்சதும் தூங்கி விழுந்து வீட்டுக்கு போற ஐ.டி. எம்ப்ளாயி மாதிரி கிளம்பிப் போயிடுவோம். எப்படியும் ஒரு மாசத்துல செத்துப்போற கொசுவை ஒரே நாள்ல கொல்றதுக்கு அவன் என்ன முட்டாளா?

அப்ப உங்களால திடீர்னு செத்துப்போற நாங்க முட்டாள்னு சொல்றியா?

ஏமாளின்னு சொல்றேன். தண்ணி தேங்குனா தான நாங்க இருப்போம். தண்ணி தேங்காம பாத்துக்காம இப்படி கடத்தி வெச்சு விசாரிக்கிறியே நீயெல்லாம் ஒரு ஆளா?

திரும்ப பேச்சை மாத்தாத... நீ திருச்சி, மதுரைல இருந்துதான வந்த. எங்க கருப்பண்ணன் எல்லா மேட்டரையும் சொல்லிட்டாரு.

அட கெரகமே. ரெண்டு மாடிக்கு மேல பறக்க முடியாத நாங்களா அத்தனை கிலோமீட்டர் தாண்டி வருவோம்?

அப்ப யார் தான் இதெல்லாம் செய்றது?

நாங்கதான். அதாவது நான்தான். அதாவது பெண் இனம் மட்டும்தான் கடிப்போம். எங்க சந்ததியை விஸ்தரிக்க ஆண் கொசுக்களோட இணை சேர எங்களுக்குத் தேவையான சத்து உங்க ரத்தத்துலதான் இருக்கு. அதுக்காக ரத்தத்தைக் குடிக்கும்போது கொஞ்சம் எங்க உமிழ் நீரும் உங்களுக்குள்ள போகும். அதுல இருந்துதான் டெங்கு பரவுறதா சொல்றாங்க. இதெல்லாம் விக்கிபீடியாலயே இருக்குய்யா. என்கிட்ட கொஞ்சம் தரமான கேள்வியா கேளு.

சென்னை கூவத்து ஓரமா நீங்க இருப்பீங்கன்னு தான் அங்க வாராவாரம் மருந்து அடிக்கிறாங்க. ஆனா, உங்க எல்லையை மீறி சிட்டிக்குள்ள வந்து நீங்க கடிக்கிறது தப்பில்லையா?

அட ஞான சூனியமே. தேங்கி நிக்குற தண்ணிலதான் நாங்க இருப்போம். கூவம் ஓடிக்கிட்டேதான இருக்கு. அதுல எங்க நாங்க இருப்போம்? ஆள் இல்லாத கடைல டீ ஆத்திட்டு பேச்சைப் பாரு. அதுவுமில்லாம அங்க இருக்க மக்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல போடுற எல்லா ஊசியும் போடுறாங்க. பத்து வயசு வரைக்கும் தூக்க முடியாத புள்ளைய கூட தூக்கிட்டு போய் போலியோ மருந்து போட்டுக்குறாங்க. ஆனா, சிட்டிக்குள்ள இருக்கவங்க எங்க பண்றீங்க? தும்மல் வந்தாகூட மருந்து ஏத்தி, இயற்கையா இருக்க வேண்டிய எதிர்ப்பு சக்தியை குறைச்சிக்கிட்டு ஊசி போட்டா மட்டுமே சரியாகுற நிலைமைல உடம்பை மாத்திக்கிட்டீங்க. பொறந்த கொழந்தை உயிரோட இருக்கும்போதே ஐஸ் பாக்ஸ்ல வெச்சு, வேலை செய்ய வேண்டிய செல்களை எல்லாம் கொன்னுட்டு எங்களைத் திட்றீங்களா? டெங்கு பரப்புற எங்க மேல தப்பா. டக்குனு டெங்கு அட்டாக் ஆகுற அளவுக்கு பலவீனமா இருக்குற உங்க மேல தப்பா?

நியாயம் அநியாயம் பேசாத. நாங்க நினைச்சா உங்க இனத்தையே அழிச்சிடுவோம்.

மனுஷங்களைவிட அதிகமா பொறக்குறது நாங்கதான். நாங்க ஏறி அடிச்சோம்னா ஒரு பய உயிர் வாழ முடியாது. ஆனா, யார் வாழணும் யார் சாகணும்னு முடிவு பண்ண வேண்டியது இயற்கை. டைனோசரைவிட நீங்க கெத்தா சொல்லுங்க. எங்க இனம் அழியணும்னா மொத்தமா 80 டிகிரி ஃபாரன்ஹீட் வரைக்கும் சூடு ஏறுனாலே நாங்க அழிஞ்சிடுவோம். நீங்க 120 வரைக்கும் தாக்குப்புடிப்பீங்க. அவ்ளோதான் சார் வாழ்க்கை.

அது ரிஸ்கான மேட்டர். ஆனா, ஆண் கொசுக்களை மலட்டுத் தன்மை உடையதா மாத்தி ஈசியா உங்களை அழிச்சிடுவோம் தெரியுமா?

நீங்க ஆயிரத்தெட்டு டெஸ்ட் பண்ணி இப்படியெல்லாம் பண்றதாலதான் இயற்கையாவே உங்க இனத்துக்கு மலட்டுத் தன்மை ஜாஸ்தி ஆகிடுச்சு. அவன் அவன் கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம சுத்திக்கிட்டு இருக்கீங்க. மரபணு மாத்துறானுங்களாம் மரபணு. எவனாலயும் மாத்த முடியாததாலதான் மரபணுன்னு பேர் வெச்சிருக்கான். இயற்கை அதோட வழியை எப்படியும் கண்டுபுடிச்சிடும்.

சுத்தி சுத்தி பேசாத மனித ரத்தம் குடிக்கிறதை நிறுத்த முடியுமா முடியாதா?

அடங்கப்பா ராசா. எங்களுக்கு உங்க ரத்தம் இன விருத்திக்கு மட்டும்தான் யூஸ் ஆகுது. மத்தபடி எங்களுக்கு எந்த ரத்தம் வேணும்னாலும் போதும். எங்களை இங்க வராத அங்க வராதன்னு சொல்றதுகு உனக்கு உரிமை இல்லை. ஆனா, எங்களால வர முடியாதபடி செய்ய ஆயிரம் வழி இருக்கு. நாங்க வாழ்றதுக்காக சாப்புட்றோம். நீங்க சாப்புட்றதுக்காகவே வாழ்றீங்க. காட்டுக்கு போனா புலி கடிக்கும்னு தெரியுதுல்ல. அதுகிட்ட இருந்து ஒதுங்கி இருக்க மாதிரி எங்ககிட்ட இருந்தும் ஒதுங்கி இருங்க. நீங்க கொத்து கொத்தா கொல்ல வழி இருக்குறதாலதான், நாங்க கொத்து கொத்தா பொறக்குறோம். இதையெல்லாம் யாராலையும் மாத்த முடியாது. ஆத்துக்கு அணை போடலாம். காத்துக்கு திரை கட்ட முடியுமா? அடே நீங்க போட்டாலும் போடுவீங்கடாப்பா. தண்ணிக்கு தர்மாகோல் அடிச்சவங்களாச்சே. கொசுக்கள்ல பல வகை இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு கெமிக்கலுக்கு சாகும். ஒவ்வொரு நோய்க்கான கொசு இருக்குன்னு தெரியும்போது, எந்த நோய் அதிகமா வருதோ அதுக்கான மருந்தை அடிச்சு கொசுவை கொல்றதை செய்யாத அரசாங்கத்து மேல காட்ட வேண்டிய கோவத்தை எங்க மேல காட்றீங்களே இது நியாயமா?

அதெல்லாம் விடு. நீ எப்படி சாகணும்னு நீயே முடிவு பண்ணு. கரண்ட் பேட்ல அடிச்சு கொல்லவா? கொசு மருந்து அடிக்கவா? புடிச்சு நெருப்புல போடவா?

அடப்பாவி. பட்டுனு அடிச்சா பொட்டுனு செத்துப்போற என்னைக் கொல்ல எத்தனை குரூரமான வழியெல்லாம் சொல்ற. எவ்ளோ பெரிய சைக்கோக்களா மாறிட்டீங்க? கைல அடிச்சு கொன்னாலும் கரண்ட் பேட்ல கொசுவைப் போட்டு எரியுறதைப் பாக்குற குரூரமெல்லாம் யாருயா சொல்லிக்கொடுத்தா உங்களுக்கு? எத்தனை கொசு கடிச்சாலும் வாலால ஓட்டிவிடுற மாடு உங்களுக்கு எவ்வளவோ தேவல. அதனாலதான் மனுஷனைக் கொன்னு மாட்டைக் காப்பாத்துற கிரேட் கவர்மெண்ட் உங்களுக்கு கிடைச்சிருக்கு. பெஸ்ட் ஆஃப் லக் கய்ஸ். நான் கெளம்புறேன். என் அப்பா காலை வெட்டாம புதைச்சதுக்கு நன்றி.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon