மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை!

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை!

நீதிபதிகள் நியமனத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் குறித்த தகவல்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றப்படும் என்று கொலீஜியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியை கொலீஜியம் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், இந்த முறையை மாற்றி மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஆறு பேரை உள்ளடக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை மத்திய அரசு 2014ஆம் ஆண்டு உருவாக்கியது. எனினும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என்று கடந்த 2015ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கொலீஜியம் முறையே தொடரும் என்றும் உத்தரவிட்டது.

எனினும், கொலீஜியம் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. மத்திய அரசுக்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

குறிப்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய ஜெயந்த் பட்டேல், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது பதவி உயர்வைத் தடுப்பதற்காகவே இந்த இடமாற்றம் எனக் கருதிய ஜெயந்த் பட்டேல், நீதிபதி பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், வெள்ளியன்று (அக்.06) கொலீஜியம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் மற்றும் மாற்றல் விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் இணையப் பக்கத்தில் உடனடியாக பதிவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, ஒரு நபரை நீதிபதியாக நியமனம் செய்ய அரசுக்குப் பரிந்துரைக்கும்போது, அவரது பெயர் மற்றும் ஏன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் போன்ற காரணங்கள் இணையப் பக்கத்தில் வெளியிடப்படும். கொலீஜியத்தின் முடிவுகள் தொடர் விமர்சனத்துக்கு ஆளாகிவரும் நிலையில், இந்த முடிவு பாராட்டுகளைப் பெற்றுள்ளன. நீதிமன்ற நியமன விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை நிலவும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon