மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சங்கரலிங்கம் (இந்தியா சிமென்ட்ஸ்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சங்கரலிங்கம் (இந்தியா சிமென்ட்ஸ்)

இந்தியாவின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை நிறுவிய எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

சங்கரலிங்கம் 1901ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் பிறந்தார். இவருடைய தந்தை இந்தோ - கமர்சியல் வங்கியின் நிறுவனர் ஆவார். பின்னால் இவ்வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கி கையகப்படுத்திக்கொண்டது. சங்கரலிங்கத்துடன் பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களில் ஏழு பேர் இந்தியா சிமென்ட்ஸில் அங்கம் வகித்தனர். இவருடைய சகோதரி சென்னையில் ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டார். சங்கரலிங்கம் 1918ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதிலேயே பிச்சுமால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 1919ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் 1946ஆம் ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை சங்கரலிங்க அய்யர் தொடங்கினார். இதற்காக அதிகளவிலான நிலங்களை சங்கரலிங்கம் கையகப்படுத்தினார். அப்போது இருந்த ஒரே பெரிய சிமென்ட் தயாரிப்பு நிறுவனம் ஏ.சி.சி. சிமென்ட்ஸ் மட்டும்தான். முதல் ஆலை சிறப்பாக செயல்படத் தொடங்கியதை அடுத்து தொழிலை விரிவுபடுத்த இரண்டாவது ஆலையை சேலம் மாவட்டம் சங்ககிரியில் 1960இல் தொடங்கினார். இந்த ஆலை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தது.

தற்போது தமிழகத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு ஏழு ஆலைகள் உள்ளன. தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் தலா ஒரு ஆலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் திரிநேத்ரா சிமென்ட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதுதவிர இரண்டு அரைக்கும் ஆலைகள் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளது. இந்த இரண்டு ஆலைகளும் 15.5 மில்லியன் டன் ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் கொள்திறன் கொண்டது. சங்கர், கோரமண்டல், ராசி கோல்டு போன்ற பிராண்டுகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அங்கங்களாகும்.

உற்பத்தியை அதிகரித்ததாலும், சந்தைப்படுத்துதலைத் தீவிரப்படுத்தியதாலும் நிறுவனத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்தது. இவருடைய தொழில்துறை வளர்ச்சியால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பும் பெற்றனர். இவர் சிமென்ட் உற்பத்தி ஆலை தொடங்கிய மூன்று ஆண்டுகளில்தான் சங்கர் சிமென்ட் நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்குப் போட்டியாக உருவெடுத்தது. இருப்பினும் சங்கரலிங்கத்தின் தொழில்துறை அறிவும், நிர்வாகத் திறனும் 70 ஆண்டுகள் கடந்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்குச் சந்தையில் மிகப்பெரிய இடத்தை அளித்திருக்கிறது.

இவருடைய உழைப்பினை மேம்படுத்தி இன்றும் இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாய் அமைந்திருந்த சங்கரலிங்கம் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவருக்குப் பின் இவருடைய மகன் கே.எஸ்.நாராயணன் நிறுவனத்தின் தலைவரானார். இவருக்குப் பின் இவருடைய மகன் சீனிவாசன் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார். இன்று இந்த நிறுவனம் பில்லியன்களில் லாபமீட்டும் மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.35.5 பில்லியனாகும். 7,500 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவராக உள்ள சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் உள்ளார். இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்கில் (ஐ.பி.எல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இவர்தான். இந்தியா சிமென்ட்ஸ் மிகப்பெரிய பிரபலம் அடைய ஐ.பி.எல். ஒரு பெரிய தளமாக அமைந்தது. இன்று இந்த நிறுவனத்தின் தலைமையிடமாக சென்னை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon