மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: கமல், ரஜினி - யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? - 2

சிறப்புக் கட்டுரை: கமல், ரஜினி - யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? - 2

மின்னம்பலம்

ம.தொல்காப்பியன்

எம்.ஜி.ஆர். மக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான ஊற்று என்ன என்பதை நாம் இக்கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம். சினிமாவில் அவர் எத்தகைய வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார் அல்லது அவர் பிரதிபலித்த வடிவம் எத்தகையதாக இருந்தது என்பதைப் பார்த்தோம்.

ரஜினியின் நடிப்பு வகை எத்தகையது? ரஜினிகாந்தின் நடிப்புச் சூத்திரமே அவர் எப்படி நுட்பமாக ஒரு பாத்திரத்துக்குள் ஒன்றிப்போய்விடுகிறார் என்பதில்தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தயாரான முதல் ‘உலக சினிமா’ என்ற தகுதியைப் பெறக்கூடிய படம் ‘ஜானி’. அதில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியவர் ரஜினிகாந்த். அதில் வரும் வித்தியாசாகரும், ஜானியும் வேறு வேறு மனிதர்கள். அவர்கள் ஒருவரால் ஆனவர்கள் அல்ல. ஒருவரே போல தோன்றும் வித்தியாசமான இருவர். ஆம்! உடல் அமைப்பால் ஒருவரே போலத் தோற்றமளித்தாலும் உள்ளத்தால் அவர்கள் துல்லியமான அளவுகளில் வேறு வேறு மனிதர்கள் என்பதை அறுதியிட்டு உணர்த்தியிருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினியின் கடந்த காலம்தான் எம்.ஜி.ஆர். என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். ரஜினி உயிர்ப்பித்துக் கொடுத்திருப்பது போன்ற ஒரு ‘பரட்டையனை’ எம்.ஜி.ஆரால் படைத்துக் காட்ட முடிந்திருக்கிறதா? ஒரு காளியை ஒரு கபாலியை, ஒரு காளையனை ஒரு புரொஃபெஸ்ஸர் பாலுவை, ஒரு பழனிசாமியை, ஒரு ராகவேந்திரரை?

அதாவது எம்.ஜி.ஆரால் உயிரூட்டப்பட்ட பாத்திரம் ஏதேனும் உண்டா? இல்லை. இல்லவே இல்லை. மாறாக அந்தப் பாத்திரத்தின் ஆன்மாவை அவர் தன்னோடு எடுத்துச் சென்றிருக்கிறார். நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு, ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, மன்னாதி மன்னன், பரிசு, தாய்க்குப் பின் தாரம், நீதிக்குத் தலை வணங்கு, இதயக் கனி, மீனவ நண்பன், ரிக்ஷாக்காரன், படகோட்டி என இன்னும் எத்தனை எத்தனையோ படங்களில் வந்த அத்தனை விதமான கேரக்டர்களினுடைய நல்ல இயல்புகளின் சின்னமாகவே எம்.ஜி.ஆர். பார்க்கப்படுகிறார்.

எம்.ஜி.ஆரின் சினிமாத்தனம் ரஜினிக்கு இருக்கிறதா?

ரஜினிக்கு மக்கள் அபிமானம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாதது. முற்றிலும் வேறுபட்டது. இருவருமே வேற்று மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். ஆனாலும் எம்.ஜி.ஆரைத் தங்களின் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக, பக்கத்து வீட்டுக்காரனாக, தங்கள் குடும்பத்தில் ஒருவராக எல்லாவற்றுக்கும் மேலாக ரத்தத்தின் ரத்தமாகத் தமிழன் ஏற்றுக்கொண்டான். ரஜினியை அப்படி எவரும் பார்க்கவில்லை. அது ஏன்? ஏனென்றால் அவர் எம்.ஜி.ஆரின் சினிமாத்தனத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதால்தான்.

எம்.ஜி.ஆரின் பாணி வேறு. ரஜினியின் பாணி வேறு. ரஜினிகாந்த் தான் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்குள் புகுவதற்கு சிவாஜி கணேசனைப் போன்ற இலக்கண வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர் கேரக்டராக மாறுவதில் சிறப்பான வெற்றி பெறுகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. கேரக்டராக மாறுவதற்கு ரஜினி சிரமப்படுவதே இல்லை. சிவாஜி கணேசன் தனது உடலிலும் உள்ளத்திலும் சித்திரிக்கப்பட்ட கேரக்டர்களின் ஆன்மாவைக் கொண்டுவர முறையான பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ரஜினிக்கு அத்தகைய சிரமங்கள் தேவைப்படுவதில்லை. நினைத்த மாத்திரத்தில் ஓர் ஆட்டோ டிரைவராக, போலீஸ்காரராக, டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, விவசாயியாக, ரவுடியாக, கொலைகாரனாக, பேராசிரியராக அவரால் மாறிவிட முடிகிறது. அதற்குத் தேவை ஓர் உணர்ச்சி மாற்றம்; சின்ன பார்வை மாற்றம்; அவ்வளவுதான்.

கேரக்டராக மாறுவதில் ரஜினியும் சிவாஜியும் பின்பற்றும் வழிமுறைகள் வேறு வேறு. ஆனாலும் அவர்கள், நடிப்பின் ஒரு முக்கியமான பண்பை நிறைவு செய்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கியம். அதாவது எம்.ஜி.ஆரைப் போலத் தனித்து நிற்காமல், கேரக்டராக மாறுவதில் அவர்கள் இருவருமே ஒன்றுபடுகிறார்கள் என்பதுதான் அது. இதுதான் அவர்கள் இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.

கமலின் இடம் எது?

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல் அவர் பங்குபெற்ற அனைத்து படங்களிலும் ஒரே சீராக இயங்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். பாரதிராஜாவின் ஒரு படம், கே.விஸ்வநாத்தின் மூன்று படங்கள், மணி ரத்னத்தின் ஒரு படம், எஸ்பி.முத்துராமனின் ஒரு சில மசாலா படங்கள், பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில படங்களைத் தவிர கமல்ஹாசன் கேரக்டராக மாறுவதே இல்லை.

சித்திரிக்கப்பட்ட கேரக்டரை சிவாஜியைப் போல எப்படி கேமரா முன் படைத்துக் காட்ட வேண்டும் என்ற அற்புத ஞானம் கைவரப் பெற்றவர் கமல். என்றாலும், அவ்வாறு அவர் செய்து காட்டியவை மிகச் சொற்பமே. அதற்குக் காரணம் அவரது அறிவாற்றல்தான்.

ஒருமுறை நடிகர் சிவகுமார் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சிவாஜி கணேசன் குறித்து ஒரு கருத்தை என்னிடம் சொன்னார். அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன்.

“சிவாஜின்னா நடிப்பு. நடிப்புன்னா சிவாஜி. சிவாஜிகிட்டேருந்து நடிப்பை பிரிச்சு எடுத்திட்டீங்கன்னா அவரு வெறும் மண்ணு. அவ்வளவுதான் சிவாஜி. அவருக்கு நடிப்பைத் தவிர வேறு எதுவுமே தெரியாது”என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார்.

இதன் பொருள், சிவாஜியிடம் போதுமான அறிவாற்றல் இல்லை என்பதல்ல. நாம் கவனிக்க வேண்டியது, அவரது அறிவாற்றல் அல்லது சொந்தக் கருத்து அவரது நடிப்பைச் செலுத்துவதில் இடையூறாக இருந்ததில்லை என்பதே. அதாவது நடிப்புக்கு வலுசேர்க்கும் அளவுக்கு மட்டுமே அவரிடம் சொந்தக் கருத்து இருந்தது. அல்லது, அந்த நோக்கத்துக்காக மட்டுமே அல்லாது வேறு எதற்காகவும் அதை அவர் பயன்படுத்தவில்லை என்பதே.

ஆனால், கமல் வித்தைகளின் கிடங்கு. மேலும், வித்தைகள் பற்றிய தனது கருத்துகளைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தத் தயங்காதவர். தனது அறிவாற்றலின் மேல் அலாதி பிடிப்பும் பற்றும் கொண்டவர். கமலஹாசனை வாழ்வின் ஒவ்வொரு படி நிலையிலும் இயக்குவது அவரது அறிவே தவிர வேறில்லை. தனது அறிவைத் தவிர இந்த உலகில் வேறு எதையும் நம்புபவர் அல்ல அவர். வேறு வகையில் சொன்னால், கமல் தனது அறிவின் கைப்பாவை. அதாவது தன் அறிவிடம் தானே சிறைபட்டுக்கொண்ட விநோதமான கைதி.

ஒரு கலைஞனின் சொந்தக் கருத்துகள் குறித்தும் அவற்றால் நேரும் விளைவுகள் குறித்தும் மனுஷ்யபுத்திரன் இப்படிப் பதிவு செய்கிறார்.

“கலைஞன் [சொந்தக்] கருத்துகள் உள்ளவனாக இருக்கலாம். ஆனால், கலையும் வாழ்வின் யதார்த்தமும் கருத்துகளுக்குச் சவால் விடுபவை; அவற்றைத் தோற்கடிப்பவை.”

தனது சொந்தக் கருத்துகளை தனது கலைப்பயணத்தின் எந்தவோர் இடத்திலும் பயன்படுத்திடாத நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடமிருந்து கமல் இங்கே துல்லியமாக வேறுபட்டு நிற்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். சிவாஜிக்கு முற்றிலும் எதிர் திசையில் இருக்கிறார் கமல்.

கமலைக் கட்டுப்படுத்தும் அவரது சொந்தக் கருத்துகள்தான் அவரைச் சிறந்த நடிகன் ஆக வெளிப்பட விடாமலும் தடுக்கிறது. தன்னைச் சந்திக்கும் இயக்குநர் ‘அறிவுத் திறன்’ மிகுந்தவர் என்று கமலின் அறிவு அவருக்குச் சொல்லுமானால் அந்த இயக்குநரிடம் அந்த விநாடியே சரணடைந்துவிடுவார் கமல்; அந்த இயக்குநரின் கைகளில் களிமண்ணாகிவிடுவார்; எந்த நிபந்தனையும் இல்லாமல் அந்த நபரிடம் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுவார்; கலைஞனாக மாறிவிடுவார். ஆனால், கமலின் அறிவு எதிரே நிற்கும் இயக்குநரின் அறிவுத் திறனால் கவரப்படவில்லை என்றால் கமல் ‘கலைஞன்’ தன்மையை அடையாமல் கமலாகவே நீடிப்பார். அவரால் வளைந்து கொடுக்க முடிவதில்லை. அறிவு சக்தியால் மட்டுமே கமலை அசைத்துப் பார்க்க முடியும். கே.விஸ்வநாத், பாரதிராஜா, மணி ரத்னம் போறவர்களிடம் இப்படித்தான் கமல் வெறும் களிமண்ணாய் மாறி மாபெரும் கலைஞனாய் மிளிர்கிறார்.

ஆகச் சிறந்த அறிவாளி கமல். அவர் சினிமாவின் அத்தனை சந்து பொந்துகளிலும் தனது ஆளுமைகளைச் செலுத்துகிறார். அத்தனை அம்சங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார். ஒவ்வொன்றையும் துல்லியமாகக் கணக்கிடுகிறார். புதுமைகளை அதன் தேவைகள் அறிந்து அவ்வப்போது புகுத்துகிறார். இன்றைக்கு இந்திய சினிமாவில் அவர் அளவுக்கு சினிமாவின் நுட்பங்களை அத்தனை நேர்த்தியாகத் தெரிந்து வைத்திருக்கும் இன்னொருவரைக் குறிப்பிடுவது கடினம். அந்த அளவுக்கு சினிமாவின் சகலகலா வல்லவனாக இருக்கிறார் கமல். கமலின் இந்த அசாத்திய அறிவாளித்தனம்தான் அவரைப் பாத்திரத்துக்குள் ஒன்றவிடாமல் தடுக்கவும் செய்கிறது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். சிவகுமார் குறிப்பிட்ட ‘மண்ணு’ என்கிற நிலைக்கு முற்றிலும் பொருந்திப்போவது ரஜினியின் இயல்பு. ரஜினியிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான். நடிப்புதான் அது. அந்த நடிப்பை அவரிடமிருந்து எடுத்துவிட்டால் ரஜினி வெறும் மண்ணு. அவ்வளவுதான் ரஜினிகாந்த். அந்த வகையில் ரஜினிகாந்த், சிவாஜியின் வாரிசு ஆகிறார். மேலும், எது குறித்தும் சொந்தக் கருத்து எதுவும் இல்லாதவர் அவர். இருந்தாலும் அதைத் தனது கலையின் மீது பாவிக்கத் தெரியாதவர் - அப்படியே நடிகர் திலகத்தைப் போல.

ரஜினி ‘குழந்தைமை’ உடையவர். அதாவது குழந்தைப் பண்பினர். வாழ்வின் முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு அவர் ஒரு முதிராத குழந்தை.

(தொடர்ந்து அலசுவோம்…)

(கட்டுரையாசிரியர் ம.தொல்காப்பியன்... எழுத்தாளர், இயக்குநர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கமல், ரஜினி - யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? - 1

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon