மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 26 பிப் 2021

கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

மின்னம்பலம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இதனையடுத்து மூன்று போட்டிகள்கொண்ட T-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் T-20 போட்டி, நேற்று (அக்டோபர் 7) ராஞ்சியில் நடந்தது. தோள்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டேவிட் வார்னர் தலைமையில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவன் மீண்டும் அணிக்குத் திரும்பினார். சீனியர் வீரரான நெஹ்ராவுக்கு T-20 அணியில் கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வார்னர்-பின்ச் களமிறங்கினர். வார்னர் முதல் ஓவரிலேயே மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அதிரடியாகத் ஆடினார். ஐந்தாவது பந்தையும் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அடித்து ஆடும்போது பந்து, பேட்டில் பட்டு ஸ்டம்பைக் குறிவைத்தது. வார்னர் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த மேக்ஸ்வெல் 17 ரன்களில் பெவலியன் திரும்பினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஆரோன் பின்ச் 42 ரன்களில் குல்தீப் சுழலில் பவுல்ட் ஆனார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்து வீச்சில் தடுமாறியது. ஹென்ரிக்ஸ் (8), ஹெட் (9) ஒற்றை இலக்கில் வெளியேறினர். அப்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்துக் களமிறங்கிய டிம் பைன் மூன்று முறை (சஹால்-கேட்ச், தோனி-ஸ்டம்பிங், புவனேஸ்வர்-கேட்ச்) அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பினார். அதிர்ஷ்ட காற்று வீசியும் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிய டிம் பைன் 17 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 118 ரன்கள் எடுத்திருந்தபோது மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பின்னர் ‘டக்வொர்த்-லீவிஸ்’ முறைப்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியினர் கைப்பற்றிய 8 விக்கெட்டில், 6 பவுல்ட் முறையில் அவுட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா, முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடக்கினார். இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ரோஹித், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, தவனுடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 5.3 ஓவர்களில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணி, T-20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon