மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ஜனாதிபதியிடம் புகார் செய்வோம்!

ஜனாதிபதியிடம் புகார் செய்வோம்!

‘துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் புகார் செய்வோம்’ என்று புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் நடக்கும் அதிகார மோதல் போக்கால் மக்கள் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டியபடியே உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “அமைச்சர் கந்தசாமியின் துறைகளில் மட்டும் ஆளுநர் கிரண்பேடி தலையிடவில்லை. ஒட்டுமொத்த ஆட்சியையும் செயல்படவிடாமல் தடுத்து வருகிறார். அவர் மனம் மாறுவார், போக்கை மாற்றிக்கொள்வார், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கிரண்பேடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சிக்கு வருகிறோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வழியில் போராடி வருகிறோம். ஆளுநரின் செயல்பாடு குறித்து எங்களது கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளோம். நேரம் வரும்போது இந்தப் பிரச்னையில் அவர்கள் தலையிடுவார்கள்.

விரைவில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்று சட்டப் போராட்டத்தில் இறங்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon