மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்வு!

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்வு!

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செப்டம்பர் மாதத்தில் 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு தற்போது இரண்டாவது மாதமாக செப்டம்பரில் டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 13.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.124.69 லட்சம் கோடியாக அதிகரித்தது.

இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.109.82 லட்சம் கோடியாக இருந்தது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.145.59 லட்சம் கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்தில் 865.8 மில்லியன் பரிவர்த்தனைகளும், ஆகஸ்ட் மாதத்தில் 883.4 மில்லியன் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், யூ.பி.ஐ., யூ.எஸ்.எஸ்.டி., பி.பி.ஐ., இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலமே அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் செப்டம்பர் மாதத்தில் யூ.பி.ஐ. மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனை 30.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பு 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 16.6 மில்லியன் பேர் மட்டுமே யூ.பி.ஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தனர். செப்டம்பர் மாதத்தில் இதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.5,293 கோடியாகும்” என்று கூறியுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon