மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

குஜராத்தில் மோடி!

குஜராத்தில் மோடி!

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாகத் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

குஜராத்திலுள்ள தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், அம்மாநிலத்துக்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை எதிர்கொள்ளும்வகையில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்டோபர் 7) குஜராத் சென்ற மோடிக்கு, ஜாம்நகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள்கள் பயணத்தில் சுமார் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். ஆறு பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக நேற்று துவார்காதீஷ் கோயிலுக்கு வருகை தந்த மோடி அங்கு வழிபாடு முடித்துவிட்டு, துவாரகாவில் நான்கு வழிப்பாதை தொங்கு பாலத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய துவாரகா நகரையும் புதிய துவாரகா நகரையும் இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்குத் தொங்கும் பாலம் அமைக்க மாநில அரசு தீர்மானித்தது. 27.20 மீட்டர் அகலம்கொண்ட நான்கு வழிப்பாதையாக அமைக்கப்படும் இந்த பாலத்தின் இருபுறமும் 2.50 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை மற்றும் சூரிய மின்சாரத்தின் மூலம் எரியும் சாலை விளக்கு என நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னர் இந்த பகுதிகளுக்குச் செல்ல மக்கள் படகுகள் மற்றும் பரிசல்களைப் பயன்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம், ஹிராசார் நகரில் 2,534 ஏக்கர் நிலபரப்பில் ரூ.1405 கோடி செலவில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், விமானங்களின் இரைச்சலைக் குறைக்கும் பசுமையான போர்வை ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த விமான நிலையம் வரும் 2021ஆம் ஆண்டு செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon