மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறப்புக் கட்டுரை: ராவணனுக்கு எத்தனை ஆதார் அட்டை?

சிறப்புக் கட்டுரை: ராவணனுக்கு எத்தனை ஆதார் அட்டை?

ஆழி செந்தில்நாதன்

இந்த ஆண்டு தசரா கொண்டாட்டங்களின்போது ராவணன் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவுக்கு விவாதப் பொருளாக ஆனார். தசராவை முன்னிட்டு ஆதார் அட்டையை வழங்கும் UIDAI நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் A time when the world sees the power of good governance.Let us continue this true spirit with Aadhaar...#HappyDussehra என்று தசரா வாழ்த்தினை வெளியிட்டிருந்தது. ஆதார் அட்டை திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துவரும் பல ட்விட்டர் குழுக்களின் ஒன்றான #DestroyTheAdhaar என்கிற குழுவிலிருந்து UIDAIஇன் இந்த வாழ்த்துக்கு எதிராக ஒரு கிண்டலான எதிர்வினை வந்தது.

Sir how many Aadhaar can Ravan get? 10 faces * 10 iris pairs = 100 at least? #DestroyTheAadhaar என்பதுதான் அந்த எதிர்வினை. ஆதார்காரர்களும் விடவில்லை. அதற்குப் பதில் எழுதினார்கள். “Not a resident of India. Not eligible to enroll for Aadhaar” என்பது ஆதாரின் பதில். அவ்வளவுதான், சமயோசிதமாக பதில் அளித்தமைக்காக UIDAIக்கு ஆதார் ஆதரவாளர்கள் லைக்குகளையும் ரிட்வீட்களையும் வாரி வழங்கினார்கள்.

அழகுதான்! ஆனால் ராவணன் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்று ராமராஜ்ய பக்தர்கள் தாங்களாகவே முடிவெடுத்துவிட முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ராவணனைக் கொளுத்தி மகிழும் ராம பக்தர்கள் மட்டும் குடிமக்களாக இல்லை. மாறாக, ராம்லீலா மைதானங்களுக்கு அப்பால், ராவணனைத் தங்கள் தெய்வமாக வழங்கும் மக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். வட இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதிகளிலும் பல ஆதிவாசிச் சமூகத்தவர்கள் ராவணனைத் தன் முப்பாட்டானாகக் கருதுகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன்? இந்திரப் பிரஸ்தத்துக்கு அருகேயுள்ள நோய்டாவிலாயே ராவணனுக்குக் கோயில் இருக்கிறதாம்.

ராம் லீலா கொண்டாட்டங்களின்போது ராவணன் கொளுத்தப்படுவதைப் பார்த்து உற்சாகமடையும் கூட்டத்தினர் மத்தியில். ராவணன் உருவத்தைக் கொளுத்தாதே என்று கூறும் கூட்டமும் இருக்கிறது என்பதை நமது ஸோ-கால்டு நேஷனல் மீடியா இதுவரை கூறவில்லை.

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ராவணனைத் தங்கள் தெய்வம் என்றுகூறி தங்கள் தெய்வத்தை கொளுத்துவது தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். தசராவின்போது ராவணன் உருவத்தைக் கொளுத்துபவர்கள்மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “விஜயதசமியின்போது ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது குறித்து ஆதிவாசி மக்கள் மத்தியில் முன்பும் எதிர்ப்பு இருந்தது என்றாலும், மாநிலத்தின் ஒரு பகுதியில் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரை இயக்கம் ஒன்று முதன்முறையாக எழுந்திருக்கிறது” என்று ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பெதுல் மாவட்டத்தில் இந்தஆண்டு இந்த எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.

“உருவ பொம்மைகளை எரிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. நாங்கள் ராவணனையும் மேகநாதனையும் வழிபடுகிறோம். இவை எங்கள் தொல் மரபு, எங்கள் உணர்வுகள் புண்பட்டுள்ளன” என்று ஆதிவாசிகளின் தலைவர்களில் ஒருவரான திலீப் துருவே ஊடகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அதை ஆமோதித்திருக்கிறார்கள் பிற ஆதிவாசித் தலைவர்களான ஆர்.எஸ்.உய்கே, பிரேம் சிங் சலம் போன்றோர்.

ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது என்பது இரு சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆதிவாசி விகாஷ் பரிஷத் என்கிற அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது.

இரு சமூகங்கள்? ஹா! தசரா கொண்டாடுபவர்கள் ஒரு சமூகம், ராவணனைக் கொண்டாடுபவர்கள் மற்றொரு சமூகம். ‘இந்துக்கள்’ இந்த வார்த்தைகளை நம்பவே மாட்டார்கள்.

ராவணன் இந்தியனா, இல்லையா?

ராமனை இந்தியக் குடிமகனாக ஏற்கும் மத்திய அரசு ராவணனைத் தங்கள் நட்பு நாடான இலங்கையின் குடிமகன் என்று நினைத்துக்கொண்டுதான் ஆதார் அட்டையைத் தர மறுக்கிறது என்று தெரியவருகிறது. இது ஆறுதலையே தருகிறது. ராமனும் ராவணனும் இருந்தபோது தெற்காசியா ஒரே நாடாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பரத கண்டம் என்கிற நாவலந்தீவு என்கிற இன்றைய இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசங்களாகவே இருந்திருக்கிறது. அவனி ஐம்பத்தாறு தேசங்கள் என்று சொல்கிறார்கள். நல்லவேளையாக, அப்போது அகண்ட இந்தியா இருக்கக் காணோம். எனவே, இலங்கையின் ராவணனை இந்தியக் குடிமகனாக ஆதார் நிறுவனத்தார் நினைக்கவில்லை.

ஆனால், ராவணன் ராமஸ்வேரம் தாண்டி பாக் ஜலசந்திக்கு அப்பால் வன்னிக்காட்டில் இருந்தான் என்பது ஒரு கதை. இந்தியாவில் இன்னொரு கதையும் உண்டு. அது ராமயணம் கூறும் லங்கா என்பது இன்றைய சத்தீஸ்கர் - ஒரிசா பகுதியைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதி என்று கூறுகிறது. ராவணன் மத்திய இந்தியப் பழங்குடிகளின் மூதாதையருள் ஒருவன் என்றும் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தின் கோண்டு பழங்குடியினரிடம் அப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது. இப்போது அவர்களிடம் வேகமாக வளர்ந்துவரும் கோண்டுவானா கண தந்திரக்கட்சியும் ராவணனை அவமதிக்கும் திருவிழாக்களுக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியினருக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி வருகிறது கோண்டுவானா கண தந்திரக்கட்சி. கோண்டுவானா என்பது தமது ஆதி நிலம் என்பதையும் இந்தியாவின் பூர்வீக நாகரிகங்களில் அதுவுமொன்று என்பதையும் வலியுறுத்திவரும் இந்தக் கட்சி, ராவணனைக் கொண்டாடும் கலாசாரம் தம் மக்களிடம் நெடுங்காலமாகவே உண்டு என்று கூறுகிறது. ஆரியர்கள் தங்களைத்தான் அசுரர்கள் என்று கூறுகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆதிவாசிகளின் அரசியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் ராவணனைக் கொண்டாடும் அரசியல் உணர்வு பரவிவருகிறது.

ராவணனைத் தமிழனாகப் பார்க்கும் பழக்கமுடைய தமிழ்நாட்டில் இந்தச் செய்திகள் ஆரவாரத்துடன் வரவேற்கப்படலாம். வேறு எந்த இதிகாச மரபையும்விட அதிகமாக திராவிட இயக்கத்தவரால் விமர்சிக்கப்பட்ட மரபு ராமகாதை. திராவிட இயக்கத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் ராமன் என்கிற உத்தம புருஷன் ஓர் உத்தம புருஷன்தானா என்று கேள்வி கேட்டார்கள். ராவணனை மையப்படுத்திய எதிர்ப்புனைவுகளும் உருவாக்கப்பட்டன. ராவண காவியத்தையே எழுதினார் புலவர் குழந்தை.

தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்தன்

சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா

அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்

ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்

குன்றெடுக்கும் நெடுந்தோளான் கொடைகொடுக்கும் கையாளன்

குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்

என்தமிழர் மூதாதை என்தமிழர்பெருமான்

ராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்

என்று பாடினார் பாரதிதாசன். (திராவிட இயக்கப் பற்றாளரான எனது உறவினர் ஒருவர் தன் மகனுக்கு ராவணன் என்று பெயரிட்டார்). ராமாயணத்தைக் கொளுத்தும் தீ பரவட்டும் என்றார் அண்ணா. கம்ப ரசத்தைப் பிழிந்து கேலி செய்தார். ராமாயணத்தின் மீதான திராவிட இயக்க விமர்சனத்தின் தாக்கம் மிகத்தீவிரமாக இருந்தபோது, ராமனையும் கம்பனையும் காக்கத் தீவிரமாக வேலை செய்தார்கள் சில தமிழ்ப் புலவர்கள். ஆனாலும்கூட “ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது அறமா மறமா” என்று கேள்விகேட்டுக் கோயில் பந்தல்களிலேயே வழக்காடு மன்றம் நடத்திய காலமாக அந்தக் காலம் இருந்தது என்பது இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

எதிர்க்கலாசாரமும் ஆதிக்கலாசாரமும்

ஆனால், தமிழகம் ராவணனைக் கொண்டாடியதற்கும் இன்று கோண்டுகள் உள்ளிட்ட பழங்குடியினர் அதைக் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ராவணனைக் கொண்டாடியது ஓர் எதிர்க்கலாசார நடவடிக்கை. ஆனால், கோண்டுகளைப் பொறுத்தவரை அது அவர்களுடைய ஆதிக்கலாசாரம்.

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் இடையிலான தொலைவு குறைவு என்பது மட்டுமல்ல; அவ்விரு ராஜ்ஜியங்களும் இப்போது மோதலிலும் இருக்கின்றன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு, பீஹார் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்துக்காகவும் மொழி உரிமை உள்ளிட்ட இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களின் தாக்கத்தால் தீவிர அரசியல் அவர்களிடம் நுழைந்து இரு பல்லாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பழங்குடி மக்களிடமிருந்தே நேரடியான அரசியல் அமைப்புகள் தமது வரலாற்றை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. அதுதான் இன்று ராம் லீலாவுக்கு எதிரான சட்டப் போராட்டமாகவும் வெடித்திருக்கிறது.

ராவணன் இந்தியக் குடிமகனில்லை என்று ஆதார் அமைப்பு கருதலாம். அப்படியானால் கோண்டுவானா இந்தியா இல்லையா என்று கோண்டுகள் கேட்டால் அவர்களிடம் பதில் இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: தன்னாட்சித் தமிழகம் என்கிற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். மொழிசார் அரசியல் குறித்த ஆழமான சிந்தனைகளைப் பல தளங்களிலும் முன்வைத்து வருபவர். தொடர்புக்கு [email protected])

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon