மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

விமர்சனம்: சோலோ - இளம்பரிதி கல்யாணகுமார்

விமர்சனம்: சோலோ - இளம்பரிதி கல்யாணகுமார்

சிவனின் நான்கு பெயர்கள். நான்கு பெயர்களில் நான்கு கதைகள். நான்கு கதைகளுக்கும் நெற்றிக்கண்ணாக நான்கு பெண்கள். கதையைச் சொல்ல பஞ்சபூதங்களின் நான்கு களங்கள். மனுஷ்யபுத்திரனின் நான்கு கவிதைகள். இப்படியாக உருவாகியிருக்கிறது சோலோ. தமிழ் அர்த்தத்தில் ‘தனியன்’ என்றிருந்தால் தனித்துவிடப்பட்ட வாழ்க்கையாகி இருந்திருக்கும். இந்த நான்கு தனியன்களுக்கும் அவர்களுக்கான உணர்வு, காதல், வெறி, ஏமாற்றம் என எவ்வாறு தனித்துவிடப்பட்டார்கள், தனித்து வாழ்கிறார்கள் என்று சொல்லும் தொகுப்பு இந்த சோலோ.

சேகரின் நீர் (World of Shekar - Water)

முதல் கதையின் நாயகர்கள் சேகர் - ராதிகா. நீரை பின்புலமாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட சூழலில் நகர்கிறது கதை. பார்வையற்ற ராதிகாவின் காதல், அவர்கள் திருமணம், குழந்தை, இழப்பு என ஒரு பயணத்தின் சுவடுகளை நீரில் காட்டியிருக்கிறார்கள். தண்ணீரில் நடனமாடும் ராதிகா, மழையில் பிழைக்கும் சேகர், ஏரிக்கு நடுவில் திருமணம், கடற்கரை முன்கதை என நீரோட்டம் சலனமற்று செல்கிறது. ராதிகாவின் மரணத்துக்குப்பின் சேகரின் தனிமைக்குப் பங்கு அவன் மகள்.

திரிலோக்கின் காற்று (World of Trilok - Wind)

ஆயிஷா இல்லாத திரிலோக்கின் பழிதீர்க்கும் வாழ்க்கையை காற்றைக்கொண்டு எழுதியிருக்கும் இரண்டாவது கதை இது. ‘அன்னிக்கி போனது ஓர் உயிர் இல்ல மூணு உயிர்’ என்று பழிவாங்கலுக்குக் காரணம் சொல்லும் திரிலோக், கர்ப்பிணி ஆயிஷா இறக்கும்போது அந்த இரண்டு உயிரோடு தன்னுயிரும் அன்றே பிரிந்துவிட்டது என்று சொல்வது அந்த கதையின் பலம். காற்றின் வசந்தத்தை உணரும் தருவாய் நிகழ்ந்த விபத்து, அலைபேசி உரையாடலால் தெரியும் காரணம் என்று இந்த கதை நகர்த்தும் காற்றுக்குப் புயலின் வாசம். இங்கு டாக்டர் திருலோக்கின் தனிமைக்கு துணை ஆயிஷாவின் நினைவுகள்.

சிவாவின் நெருப்பு (World of Shiva - Fire)

தனித்துப்போவதற்குக் காரணிகளான ராதிகா, ஆயிஷா போல இந்த மூன்றாவது கதையின் காரணம், சிவாவின் அம்மா. நெருப்பில் எரிக்கப்படும் சிவாவின் குடும்பப் புகைப்படத்தோடு தொடங்குகிறது கதை. பிறழ்ந்த அப்பா, பிரிந்து செல்லும் அம்மா, அதனால் பின்னாளில் நிகழும் அப்பாவின் மரணம், அதற்கான சிவாவின் கோபம் என நெருப்புக்கற்றைகளாகச் சுட்டுக்கொண்டிருக்கிறது சிவாவின் தோல்வியடைந்த வாழ்க்கை. கதை முழுக்க பயணிக்கும் தழல்தான் ரவுடி சிவாவின் கோபம். இந்தக் கதையில் சிவாவின் தனிமைக்குத் துணை அவனது மரணம்.

ருத்ராவின் நிலம் (World of Rudhra - Earth)

இறுதியாக நிலத்தின் பொறுமையில் கைகூடாத காதலின் பதிலுக்கு காத்திருக்கும் ருத்ராவின் வாழ்க்கை. காதல், பிரிவு, அதற்கான காரணம் என்று நகரும் இந்தக் கதைக்கு ஜீவன் ருத்ரா மட்டுமே தவிர, நான்கு ஆண்டுகள் காத்திருப்புக்குக் கிடைத்த பதில் அல்ல. சேராத காதலில் துவண்ட ருத்ராவின் தனிமைக்கு உடனிருப்பு அவன் உத்தியோகம். இயக்குநர் பிஜோய் நம்பியாரின் நான்கு வெவ்வேறு குறும்படங்களின் தொகுப்பு சோலோ என்கிற முழுப்படம். பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல், மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, வசந்தின் மூன்று பேர் காதல் என தமிழ் சினிமா கண்டிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கதை கொண்ட படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த சோலோ. இரண்டு கதைகள், மூன்று கதைகள் என்று இருந்த வரிசையில் இந்தப் படம் நான்கு கதைகளோடு வருவது இந்த வகையான படங்களுக்கு அடுத்த படி. முன் சொன்ன படங்களின் முடிவுகளில் கதைகளின் இணைப்பு இருப்பதால் சோலோ அதனோடு சேராமல் விலகியிருக்கிறது.

நான்கு கதைகளுக்கும் வெவ்வேறு தொழில்நுட்பம், வெவ்வேறு படமாக்கல் முறை, இசை என தனித்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர். நான்கு கதைகளும் தனித்திருந்தாலும் அவற்றின் மையப்புள்ளியாக ஓர் ஆணின் தனிமையை பெண்ணென்ற காரணி கொண்டு சொல்கிறது. பெண்கள் காரணமாவது எப்படி என்பது மட்டுமே கதைக்கரு. நான்கு கதைகளையும் தனது எட்டு கைகளில் சோலோவாகத் தூக்கி சுமக்கிறார் துல்கர் சல்மான். உணர்வுகளின் அடிப்படையில் நான்கு கதாபாத்திரங்களுக்கும் அவர் காட்டியிருக்கும் உடல்மொழி பாராட்டுதலுக்குரியது. ராதிகாவாக தன்ஷிகாவும், ருக்குவாக ஸ்ருதி ஹரிஹரனும் நிறைவாக பணி செய்திருக்கிறார்கள். நான்கு கதையையும் தனித்துச்சொல்வதற்கு மிக முக்கிய பலமாக இருக்கிறது இசையும், ஒளிப்பதிவும்.

முதல் கதையான World of Shekar மிகச்சாதாரண உரையாடல். இரண்டாவது கதையான World of Trilok காட்சிகளின் அமைதியில் எந்தவொரு அலுப்புமின்றி ரசிக்க வைக்கிறது. மூன்றாவது கதை World of Shiva கூட அடர்ந்த காட்சிகளால் கூடவே பயணிக்க வைக்கிறது. ஆனால், இறுதியாக வரும் World of Rudhra கதை அதன் முடிவால் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. மலையாள ரசிகர்களுக்கு வேண்டுமானாலும் நான்காவது கதையில் வரும் ட்விஸ்ட் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், நமக்கு அது நாடறிந்த புகழ்பெற்ற நகைச்சுவை என்பதால் சீரியசான காட்சியெல்லாம் அரங்கம்

சிரிப்பொலியில் நிறைகிறது. தனித்தனியாக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நான்கு கதைகளைச் சமரசமின்றி சோலோவாகவே எடுத்த இயக்குநரின் முயற்சிக்கும் தைரியத்துக்கும் பாராட்டுகள். தனித்திருக்கும் வாழ்க்கைக்கு நாம் தேடும், நமக்கு கிடைக்கும் உயிர்த்துணைகளுக்கு ‘சோலோ’ என்று பெயர்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon