மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

பூதக்கண்ணாடியில் தேடினாலும் ஆட்சியில் குறையில்லை!

பூதக்கண்ணாடியில் தேடினாலும் ஆட்சியில் குறையில்லை!

‘அரசின் மீது குறை இருக்குமா என்று பூதக்கண்ணாடியில் தேடிப்பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்படி தேடினாலும் ஆட்சியில் குறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (அக்டோபர் 7) தருமபுரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தருமபுரி அரசு கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் - தருமபுரி, தருமபுரி - கிருஷ்ணகிரி சாலை மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் வழக்கம் போல மாவட்டத்தின் பெருமைகளைக் கூறியவர், காற்றின் பேச்சை கேட்ட பூவின் கதையை கூறினார். அதில் காற்றின் பேச்சைக் கேட்டு செல்லும் பூவின் நிலைமை, காற்று நின்றவுடன் வாடிபோய் உதிர்ந்து சருகாகிவிடும் என்று தினகரன் அணியிலுள்ளவர்களை மறைமுகமாக விமர்சித்தார்.

அடுத்து, “தருமபுரி மாவட்டத்திலே இருவர் பாதை மாறி சென்றுவிட்டார்கள். அவர்கள் போனால் என்ன? தருமபுரி மாவட்டத்திலுள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என நாங்கள் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற இங்கு கூடியுள்ள இந்த காட்சியே இதற்கு சாட்சி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு எதிர்க்கட்சியெல்லாம் ஏதாவது ஒரு குறையை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எப்போது பேட்டி கொடுத்தாலும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அவருடைய வேதவாக்காக உள்ளது. இன்றைக்கு அவர்கள் தேடி தேடி, பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கின்றார்கள். ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு போராட்டத்தை நடத்தி, இந்த அரசுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்து கெட்ட பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. பிரச்னையை எப்படி சமாளிக்க வேண்டும் என எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். அரசு அனைத்து திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தியுள்ளது. ஐந்து முறை வாய்ப்பளித்தும் ஆட்சியை மக்கள் நலனுக்காக திமுக பயன்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது தமிழகத்திலே சீதோஷ்ண நிலை மாறிய காரணத்தினாலே, ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், குறிப்பாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon