மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பிரமாணப் பத்திரங்கள் வாபஸ்? தடுமாறும் தீபா பேரவை!

பிரமாணப் பத்திரங்கள் வாபஸ்? தடுமாறும் தீபா பேரவை!

டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணியும் தினகரன் அணியும் பிரமாணப் பத்திரங்களை இறுதி விசாரணை நாளான அக்டோபர் 6ஆம் தேதிக்கு முன்னால் தாக்கல் செய்துகொண்டிருக்க, தீபா அணியின் சார்பில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலால் தீபா பேரவைக்குள் மீண்டும் குழப்பம் குடிகொண்டுள்ளது.

தீபா அணியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்தான் அந்த அணியின் சார்பாக டெல்லி சென்று பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற்றுக்கொண்டதாக வந்த தகவல் பற்றி அவரிடமே பேசினோம்.

“தீபாவின் நடவடிக்கைகள் கொஞ்சம்கூட சரியில்லாத காரணத்தால் அவரை நம்பி வந்த ஏராளமான நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தோம். எனவே, தீபா பேரவையையே கலைத்துவிட்டோம். சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், ஜானகிராமன் என்பவர் தீபா பேரவையை எதிர்த்து மோசடி வழக்குத் தொடர்ந்தார். உறுப்பினர் படிவம் வசூல் செய்வதாகச் சொல்லி ஐம்பது லட்சம் ரூபாயை தீபா ஏமாற்றிவிட்டதாக வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்குக்கே பேரவை சார்பாக நான்தான் இதுவரைக்கும் வாதாடி வந்தேன். தீபா பேரவை என்பது பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. அது நலச் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு. அதையும் பதிவாளர் அலுவலகம் ரத்து செய்துவிட்டது. அந்த அமைப்பு சட்ட ரீதியானது அல்ல.

தேர்தல் ஆணையத்தில் அதிமுக தீபா அணி என்பதை எனது பெயரில் பதிவு செய்திருந்தேன். தீபா அதிமுக உறுப்பினர் கிடையாது என்பதால் என் பெயரில் பதிவு செய்திருந்தேன். ஆனால், அவர் வேறு சில நபர்களின் பிடிக்குள் இருந்து செயல்பட்டு வந்ததால் அவரை நம்பி வந்த பலர் ஏமாற்றப்பட்டோம். இரட்டை இலை சின்னம் பற்றிய இறுதி விசாரணைக்காக என்னையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணியையும் டெல்லிக்கு அனுப்பிவிட்டு... பின்னாலேயே தனது டிரைவர் ராஜாவை அனுப்பி நாங்கள் தாக்கல் செய்த ஐந்தரை லட்சம் பிரமாணப் பத்திரங்களை வாபஸ் வாங்க முயன்றிருக்கிறார் தீபா. நான் அதை இப்போது தடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த டெல்லி நாடகத்தை தீபா அரங்கேற்றுவது யாருக்காக? ராஜாவை தீபா எதற்காக டெல்லிக்கு அனுப்பினார்?

தீபா பணம் வாங்காத அணியே இல்லை. அம்மா மரணம் தொடர்பாக ரத்த சொந்தமான தீபா இதுவரை ஏன் வழக்குத் தொடரவில்லை? போயஸ் கார்டனுக்காக நீதிமன்றம் ஏறுகிற தீபா, அம்மாவின் மர்ம மரணம் தொடர்பாக இதுவரை ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? இதுபற்றியெல்லாம் பலமுறை அவரிடம் கேட்டும் பதில் இல்லை. மேலும் தீபா லண்டனில் படிக்கும்போதே அவரது படிப்புக்குச் செலவு செய்தவர் சசிகலாதான். மேலும், பல வகைகளிலும் சசிகலாவிடம் தீபா பணம் வாங்கியுள்ளார்” என்று தீபா மீது புகார்களை அடுக்கிய பசும்பொன் பாண்டியனிடம்,

“இதெல்லாம் தெரிந்தும் ஏன் இத்தனை மாதங்கள் தீபாவின் ஆதரவாளராக இருந்தீர்கள்?” என்று கேட்டோம்.

“அம்மாவின் ரத்த சொந்தமாக இருக்கிறாரே, அம்மாவின் வழியில் நடப்பார் என்று அவரோடு இருந்தோம். ஆனால், அவர் சில கெட்டவர்களின் பிடியில் இருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து வேதனையோடு விலகிவிட்டோம். இதுபற்றி நாளை அக்டோபர் 9ஆம் தேதி மாலை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இன்னும் பல விவரங்களை வெளியிட உள்ளேன்” என்றார் பசும்பொன் பாண்டியன்.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, “தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் வாங்கவில்லை” என்று மறுத்தார்.

“தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை வாபஸ் வாங்கவில்லை. மேலும் கடந்த 6ஆம் தேதி அஇஅதிமுக ஜெ.தீபா அணி சார்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் சாமி சின்னபிள்ளை, வழக்கறிஞர் வெங்கடாசலபதி ஆகியோர் ஆஜராகி வாதங்கள் நடைபெற்றது. கழகத்தின் சார்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். பசும்பொன் பாண்டியன் எங்களுக்கு எதிராக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். 13ஆம் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையிலும் தேர்தல் ஆணையத்தில் நாங்கள் பங்கு கொள்வோம்” என்று தெரிவித்தார் தீபா.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon