மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கேரள முதல்வருக்குத் தமிழகத் தலைவர்கள் பாராட்டு!

கேரள முதல்வருக்குத் தமிழகத் தலைவர்கள் பாராட்டு!

அரசுப் பணிகளுக்கு இருக்கும் இடஒதுக்கீடு முறையின் அடிப்படையில் கேரளாவில் கோயில் மதகுரு பணிகளுக்கு நடைபெற்ற தேர்வில், 6 தலித்துகள் உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 36 பேரை இந்து ஆலய மதகுரு பணிக்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவிக்கும்விதமாக தமிழகத் தலைவர்கள் கேரள அரசுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினரை திருவிதாங்கூர் தேவசம் போர்டில் அர்ச்சகர்களாக நியமித்து மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளீர்கள். ஆலயங்களில் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய நீதிக் கட்சியின் வழித்தோன்றலான திமுக, கேரள மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தச் சாதனையைக் கொண்டாடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

கேரள திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் சமூகரீதியிலும் சட்டரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்

கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு, கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon