மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 10 பேர் கைது!

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் நேற்று இரவு (7.10.2017) மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைச் சிறைபிடித்தனர். மீனவர்கள் சென்ற படகு ஒன்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக வல்வெட்டுத்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் ஒரு படகும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், சிறைபிடித்து அழைத்துச்செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பேசும் போது, “மீன்பிடிக்கச் சென்றால்தான் நாங்கள் மூன்று வேளை உணவை உண்ண முடியும். ஆனால், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் எங்களின் உயிருக்கோ எங்கள் உடைமைகளுக்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. இலங்கை கடற்படையின் அட்டூழியங்களை இந்திய அரசு கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள்” என்று குமுறுகிறார்கள்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon