மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

கெயில் திட்டத்தை ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?

கெயில் திட்டத்தை ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?

‘கெயில் கியாஸ் திட்டத்துக்கு முன்பு ஒப்புதல் அளித்த ஸ்டாலின், தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?’ என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு வரை கியாஸ் கொண்டு செல்வதற்கான பணிகளை 2012ஆம் ஆண்டு கெயில் நிறுவனம் தொடங்கியது. இதில் தமிழகத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக 310 கிலோதூரத்துக்குக் குழாய் பதிப்பு பணியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குழாய் பதிப்பினால் ஏழு மாவட்டங்களில் பெருமளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். சமீபகாலம் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கெயில் கியாஸ் திட்டத்தை அவசரமாக நிறைவேற்றக்கோரி பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானதை தொடர்ந்து இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கெயில் கியாஸ் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராட்டம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலின் கருத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “கெயில் திட்டத்துக்கு ஆரம்ப காலத்தில் திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்த ஸ்டாலின், தற்போதைய எதிர்ப்பு குரல் ஏன்? ஆட்சியில் இல்லாதபோது நாடகமா?” என்று பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon