மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தெலுகுவின் ப்ளே-ஆப் கனவைத் தகர்த்த ஹரியானா!

தெலுகுவின் ப்ளே-ஆப் கனவைத் தகர்த்த ஹரியானா!

ப்ரோ கபடி தொடரின் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் அந்த அணியின் ப்ளே-ஆப் கனவு தகர்ந்தது.

ஜெய்ப்பூரில் நேற்று (அக்டோபர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் அபாரமாக ஆடிய ஹரியானா அணியின் ரைடர்கள் வாஸிர் சிங், சுர்ஜித் சிங் ஆகியோர் தொடர்ச்சியாகப் புள்ளிகளைக் குவிக்க, 12ஆவது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டானது. இதனால் ஹரியானா 13-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி 13ஆவது நிமிடத்தில் தனது முதல் புள்ளியைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி, முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 16-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சிறப்பாக ஆட, 32ஆவது நிமிடத்தில் ஹரியானா 24-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு அபாரமாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ், 36ஆவது நிமிடத்தில் ஹரியானா அணியை ஆல் அவுட்டாக்கியதோடு, ஸ்கோரையும் 27-27 என சமன் செய்தது. இதன்பிறகு வாஸிர் சிங் ஒரு புள்ளியைப் பெற, அதற்குப் பதிலடியாக ராகுல் செளத்ரி ஒரு புள்ளியைக் கைப்பற்றினார். இதனால் 39ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 29-29 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. கடைசி நிமிடத்தில் வாஸிர் சிங் தொடர்ச்சியாக இரு புள்ளிகளைக் கைப்பற்றி ஹரியாணாவை 32-30 என வெற்றி பெறச் செய்தார். ஹரியானா தரப்பில் வாஸிர் சிங் 14 புள்ளிகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக 11 புள்ளிகளைக் குவித்த தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி, ப்ரோ கபடி வரலாற்றில் 700 புள்ளிகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதுவரை 11 வெற்றிகளைப் பெற்றுள்ள ஹரியானா அணி, 69 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் 2ஆவது இடத்தில் உள்ளது. 7 தோல்வியைச் சந்தித்துள்ள தெலுகு டைட்டன்ஸ் 49 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 4ஆவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியே ப்ளே-ஆப் சுற்றுக்குத் தகுதிபெறும் என்பதால் தெலுகு அணியின் ப்ளே-ஆப் கனவு தகர்ந்தது.

இன்றைய ஆட்டங்கள்:

குஜராத்-பாட்னா (இரவு 8 மணி)

ஜெய்ப்பூர்-புனே (இரவு 9 மணி)

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon