மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஆசிரியர் தாக்கியதால் கண் பார்வை இழந்த மாணவன்!

ஆசிரியர் தாக்கியதால் கண் பார்வை இழந்த மாணவன்!

உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அறைந்ததால் மாணவர் கண் பார்வை இழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சபான் கான் என்ற மாணவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஆசிரியர் அனுமதி இல்லாமல் நண்பனிடம் இருந்த நோட்டு புத்தகத்தை வாங்க தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

இதைக் கவனித்த ஆசிரியர், சபான் கானை அழைத்து அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மாலை வீட்டுக்கு வந்தபிறகு, பள்ளியில் ஆசிரியர் அடித்ததையும் தன்னுடைய வலது கண் மூலம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சபான் கானின் பெற்றோர் உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு கண்ணில் 90 சதவிகிதம் பார்வை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது மாணவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவனின் தந்தை ரிஸ்வான், “எனது மகனுக்கு 90 சதவிகிதம் பார்வை பறிபோயுள்ளது. நாங்கள் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனியார் பள்ளியில் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் மாணவர்களுக்குப் பள்ளியில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. பள்ளி நிர்வாகம் சார்பிலும் உரியப் பதில் அளிக்கவில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon