மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறார் பாலியல் குற்றத்துக்குத் தூக்கு தண்டனை!

சிறார் பாலியல் குற்றத்துக்குத் தூக்கு தண்டனை!

சிறுமிகள் மற்றும் சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்ற வகை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இதனால் சிறார்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் மனநல பாதிப்புக்கு ஆளாகி நிற்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் சென்னை முதலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையாளி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டு வயது சிறுவன் அந்த பள்ளியில் பணியாற்றி பேருந்து நடத்துநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுக் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டான். இதுபோல் நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எனவே சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் வகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி தலைமையில் நடைபெற்ற பாரத் யாத்ரா பிரசாரத்தில் நேற்று 7.9.2017 மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: “சிறுவர், சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். சிறுவர்களும், சிறுமிகளும் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், வீடுகளிலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடான செயல். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நாடு முழுவதும் அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. சிறுவர், சிறுமிகளைப் பலாத்காரம் செய்யும் கொடியவர்களைத் தூக்கில்போட வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். இந்த சட்டத்திருத்தம் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அரசுடன் சமூகமும் சேர்ந்த இந்த கொடும் செயலுக்கு எதிராகப் போராட வேண்டும். குழந்தை தொழிலாளர் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” இவ்வாறு சவுகான் கூறினார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon