மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

பசு தானம் செய்யும் அமைச்சர்!

பசு தானம் செய்யும் அமைச்சர்!

தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஏழை எளியக் குடும்பத்தார் உதவி கேட்டுவந்தால் குடும்ப நிலையை ஆய்வுசெய்து ஒரு பசு மாட்டைப் பிடித்துவந்து, பயனாளி கையில் கொடுத்து அனுப்பி வைக்கிறாராம். இதனால் சம்பத்துக்கு கடலூர் மாவட்ட ஏழைகள் வட்டாரத்தில் நல்ல பெயர் கூடிக்கொண்டிருக்கிறது.

அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம், மேல்குமாரமங்களம் ஊராட்சியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சித்திரசாவடி திருமலை நகரில் இருக்கும் அமைச்சரின் வீட்டுக்குப் பின்னால் கொட்டகை அமைத்து 50க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அதேபோல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் சம்பத் 50 மாடுகளைப் பராமரித்து வருகிறார்.

சென்னையிலும், கடலூர் மாவட்டத்திலும் நலிந்தவர்கள், கட்சியினர், வாழ்க்கை நடத்த வழி கேட்டு அமைச்சரிடம் வந்தால், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சில நேரம் ஒரு லட்சம் மதிப்புள்ள மாட்டையும் கூட கொடுத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று வாழ்த்தி வருகிறார் அமைச்சர். அமைச்சரின் பசு தானம் பற்றி அவரது வட்டாரத்தில் விசாரித்தோம். “பசு தானம் செய்தால் பஞ்சம் வராது என்று சொல்வார்கள். மேலும் பசு தானத்தால் புண்ணியம் சேரும் என்பதும் நம்பிக்கை. அதனால் அமைச்சர் ரொம்ப நாளாகவே இந்தப் பழக்கத்தை காதும் காதும் வைத்த மாதிரி செய்து வருகிறார். இப்போது அவரிடமிருந்து பயன் பெற்றவர்கள் மூலமாக இது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிகிறது” என்கிறார்கள்.

கூடுதலாக, “இதுக்கும் அதிமுக - பாஜக பாசத்துக்கும் முடிச்சுப் போட்டு விட்டுடாதீங்க” என்று வாலண்டியராக வண்டியில் ஏறுகிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon