மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பெட்ரோல், டீசல்: மதிப்புக் கூட்டு வரி குறைக்காதது ஏன்?

பெட்ரோல், டீசல்: மதிப்புக் கூட்டு வரி குறைக்காதது ஏன்?

பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2% குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை 5% குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதையேற்று குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எரி பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் இதேபோல பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அவர் இன்று (அக்டோபர் 8) இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “டீசல் உற்பத்தி விலை ரூ.25.00 ஆக உள்ள நிலையில், அவற்றின் விற்பனை விலை மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது. பெட்ரோல் மீது ரூ.45 வரையிலும், டீசல் மீது ரூ.35 வரையிலும் வரிகள் விதிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் மறைமுக வரி வருவாயில் பெரும்பகுதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளில் இருந்துதான் கிடைக்கின்றன. ‘ஒற்றை நாடு, ஒற்றை வரி’ என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொருள்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும்கூட, பெட்ரோல், டீசலை அந்த வரி விதிப்பின்கீழ் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “பெட்ரோல், டீசல் பொருள்கள் மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய, மாநில தயாராக இல்லாத நிலையில், குறைந்தபட்சம் கலால் வரியையாவது குறைக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்திய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், விலை லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல” என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ்,

“கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அதிகரித்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு 15.77 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.47 ரூபாயும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரிக்குறைப்பை செய்ய அரசுகள் மறுக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட வரியை குறைப்பதால் அவற்றுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படப் போவதில்லை. எரி பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி, கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.48, டீசல் விற்பனை மூலம் ரூ.18.26 வருவாய் கிடைக்கிறது. பெட்ரோலின் உற்பத்திச் செலவைவிட அதிகமாக மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு வசூலிப்பது எவ்வகையிலும் முறையானதோ, நியாயமானதோ அல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த மூன்றாண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் எரி பொருள்களின் விலை 22% வரை குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon