மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

சாமானியர்கள் சினிமா பார்க்க முடியாது!

சாமானியர்கள் சினிமா பார்க்க முடியாது!

ஜி.எஸ்.டி. வரி, டிக்கெட் விலையேற்றம் குறித்து திரையுலகைச் சார்ந்த பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி டிக்கெட் விலையேற்றம் குறித்து ‘சாமானியர்கள் படம் பார்க்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களுக்கு 30% என்ற கேளிக்கை வரியை 10% ஆகக் குறைத்து வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்குத் திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னையில் டிக்கெட் விலை ரூ.160 ஆகவும், மற்ற பகுதிகளில் ரூ.140 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சீனு ராமசாமி தனது ட்விட்டரில் நேற்று (அக். 7), “தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகிவிட்டது. இதனால் நியாயமாகப் பார்க்க முடியாத மக்களால், சினிமா தொழில் அழிய நேரும்” என்று பதிவிட்டிருந்தார்.

இன்று (அக். 8) காலை, “அதிக கட்டணத்தால் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்றாலே அலர்ஜி ஆகும். உற்பத்தி வினியோகம், தொழிலாளர்கள் ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் பாதிப்புதான்” என்று பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon