மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஹஜ் மானியம் ரத்து?

ஹஜ் மானியம் ரத்து?

ஹஜ் பயணத்துக்கான மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யும் வரைவு பரிந்துரை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குச் செல்வது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 1.70 லட்சம் இஸ்லாமியர்கள் மத்திய அரசின் மானியத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஹஜ் பயணிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்ற முன்னேற்றங்களுக்கு இத்தொகையைச் செலவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 2022ஆம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இது தொடர்பாக புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவின் வரைவு பரிந்துரை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விடம் நேற்று (அக். 7) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018-22 வரையிலான காலகட்டத்துக்கான அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* ஹஜ் பயணிகளுக்கான தற்போதுள்ள 21 புறப்பாடு மையங்கள் 9 ஆகக் குறைக்கப்படும். புதிய வரைவு கொள்கையின்படி டெல்லி, லக்னோ, கொல்கத்தா, ஆமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய 9 நகரங்களில் இருந்துதான் இனி விமான பயணம் மேற்கொள்ள இயலும்.

* இந்தப் புதிய கொள்கை ஹஜ் பயணத்துக்கு மானியம் அளிப்பதை ரத்து செய்கிறது.

* ஹஜ் பயணம் மேற்கொள்வதற்குக் கப்பல் வழிப் பயணமும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சவுதி அரேபிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* 45 வயதுக்கு மேலான பெண்கள் மெஹ்ரம் துணையில்லாமல் நான்கு பேர் கொண்ட குழுவாகப் பயணிக்கலாம். மெஹ்ரம் என்பது கணவர் அல்லாத பிற ஆண்களைக் குறிக்கும் (தந்தை, மகன், சகோதரர் போன்றவர்கள்)

* புதிய புனித ஹஜ் பயணக் கொள்கையின்படி இந்திய அரசின் ஹஜ் குழு மற்றும் தனியார் மூலம் அனுப்பி வைக்கப்படும் பயணிகளின் விகிதாச்சாரம் முறையே 70:30 என்ற அளவில் இருக்கும். இதன் காரணமாக வெளிப்படைத் தன்மை அமையும்.

* மானியம் ரத்து செய்யப்படுவதால் கிடைக்கும் தொகையை இஸ்லாமியர்களின் நலனுக்குக் கல்விக்குச் செலவிடப்படும் என்று அமைச்சகத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகள் அமைச்சகம் மூலம் சரி பார்க்கப்படும். பின்னர் இதைச் செயல்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பகிர்ந்துகொள்ளப்பட்டுக் கருத்து கேட்கப்படும்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon