மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்!

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்!

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உலக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 1 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உடல் பருமன், பெண்கள் தங்களது அழகைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமை உள்ளிட்ட பலகாரணங்களால் பெரும்பாலோனோர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இன்று(அக்டோபர் 08) மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நடிகை கெளதமி மற்றும் மாநகர காவல் ஆணையர் அருண் தொடங்கிவைத்த மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிங்க் அக்டோபர் எனப் பெயரிடப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டம் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே நடைபெற்றது. ஆண்களுக்கு 21 கி.மீ சாலைத் தொடர் ஓட்டம் மாம்பழச் சாலையிலிருந்தும், பெண்களுக்கு 5 கி.மீ ஓட்டம் தில்லைநகர் பகுதியிலிருந்தும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

ஆண்களுக்கான 21 கி.மீ பிரிவில் சென்னை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஹரி, நாகேஷ் பவர் ஆகியோர் முதல் 2 இடங்களையும், பெண்கள் 5 கி.மீ பிரிவில் அகல்யா, ரேணுகா ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர்.

முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon