மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சசிகலாவை சந்திக்க மாட்டோம் : அமைச்சர்!

சசிகலாவை சந்திக்க மாட்டோம் : அமைச்சர்!

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை,அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டோம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைந்த பிறகு, தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைந்த அணிகள் நடத்திய பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இனி ஒருபோதும் சசிகலா, தினகரனை கட்சிக்குள் இணைக்க மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் ஒ.எஸ்.மணியனும் சசிகலா ஆதரவாகவே பேசி வருகின்றனர். இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ,"இந்த ஆட்சி அமைய சிறப்பாக செயல்பட்டவர் மாண்புமிகு சின்னம்மா"என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,"மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை அமைச்சர்களாகிய நாங்கள் யாரும் பார்க்கவில்லை. நாங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளம் வரையிலும் சென்றோம். அதற்கு மேல் செல்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் என்னை அழைத்து விசாரித்தால், அங்கு உரிய விளக்கமளிப்பேன். அமைச்சர்களும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதிலளிப்பர்" என்றார்.மேலும் சசிகலாவுக்கு பரோல் வழங்கியதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதற்கு தமிழக அரசே காரணமெனவும் கூறுவது தவறானது. சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. பரோலில் வந்துள்ள சசிகலாவை, அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள்"என்றும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon