மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்!

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று (அக்டோபர் 8) பகல் 2 மணியளவில் தொடங்கியது. இதில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில், சங்கத்தின் 2016 - 17 ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. மூத்த நடிகைகள் காஞ்சனா, ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் ஆண்டு கணக்கு வெளியிடப்பட்டது. நிலையான சொத்துக்கள் ரூ.1.46 லட்சம், நடைமுறை சொத்துக்கள் ரூ. 34.91 லட்சம், மூலதன கணக்கு ரூ.1.06 கோடி, ரொக்க கையிருப்பு ரூ.1.09 லட்சம், வங்கியிருப்பு ரூ.18.31 லட்சம் என கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வரவு, செலவு கணக்கை முறையாக தெரிவிக்குமாறு கூறி சிலர் கேள்வி கேட்டனர். அதனால் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் விஷால் பேசும் போது, “எங்கள் செயல்பாடுகளில் எந்த கெட்டதையும் கண்டுபிடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டிடம் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி மிகப்பெரிய சுமையாக உள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் தமிழ் சினிமா செயல்பட முடியும்” என்று தெரிவித்தார்.

கார்த்தி பேசுகையில், “ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். இதற்காக நடிகர்கள் கமல், ரஜினியிடம் ஒப்புதல் பெற்று விட்டோம். அறங்காவல் குழுவிடம் ஒப்புதல் பெறப்படும். உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய முடியவில்லை. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை காட்டிலும், செலவு அதிகமாகும்” என்று குறிப்பிட்டார்.

சிவாஜி சிலை கல்வெட்டில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதி பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி இன்று சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon