மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

சிலைகள்: மாசுபடும் யமுனை!

சிலைகள்: மாசுபடும் யமுனை!

இந்தியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாக யமுனை உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளதும் இந்த நதியின் கரையில் தான். பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான யமுனை, மனிதர்களின் அலட்சியத்தால் சமீப காலங்களில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. அதில், முக்கியமான ஒன்று சிலைகள் கரைப்பது. நவராத்திரி அண்மையில் முடிவடைந்த நிலையில் ஏராளமான துர்கா சிலைகள் யமுனையில் கரைக்கப்பட்டுள்ளன

தெற்கு டெல்லியின் கலந்தி குஞ்ச் மற்றும் வடக்கு டெல்லியின் நிகாம் போத் காட் கரைகளில் கரைந்தும் கரையாத நிலையில் ஏராளமான துர்கா சிலைகள் தென்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டவை. களிமண் மூலம் செய்யப்படும் சிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவை எளிதாக நீரில் கரைந்துவிடும். ஆனால் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அப்படியல்ல. தண்ணீரில் கரையாமல் பல காலங்கள் ஆற்றிலேயே மிதந்து தண்ணீரை

மாசுப்படுத்தும். இவற்றை அப்புறப்படுத்துவதும் எளிதான காரியமல்ல.

இவற்றை அப்புறப்படுத்த முயன்ற பலருக்கு அவற்றின் உடைந்த பாகங்கள் காயத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சிலைகள் டெல்லி, குர்கான், நொய்டா, காஜியாபாத், ஃபரிதாபாத் போன்ற பகுதியில் இருந்து மிதந்து இங்கு வந்துள்ளன. இவற்றுடன் பிளாஸ்ட்டிக் கவர்கள், குப்பைகள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட அலங்காரங்கள் ஆகியவையும் சேர்ந்துள்ளன.

2015ம் ஆண்டே பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் சிலைகள் செய்வதற்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கொண்ட பெயிண்ட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவை மண் மற்றும் நீர் ஆகியவற்றுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனினும் பெரும்பாலானோர் சிலைகளை கரைப்பதற்கு முன்னர் கரையாத பொருட்களை அவற்றில் இருந்து அகற்றுவதில்லை. சிலைகள் செய்யப்படும் பொருட்கள் குறித்தும் சோதனை எதுவும் செய்யப்படுவதில்லை.

இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த சுற்றுச் சூழல் குழுவைச் சேர்ந்த சி.ஆர்.பாபு கூறும்போது, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உடன்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது மோசமாக உள்ளது. மக்கும் பொருட்களை பயன்படுத்தவில்லை என்ற காரணங்களுக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறார்.

இதே பிரச்னை தொடர்பாகக் கடந்த 2010ம் ஆண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாகவும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு சார்பாகவும் வரைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரைமுறைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களால் கவனிக்கப்படாமலேயே உள்ளன.

இந்த ஆண்டு, 200 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதுபோல், வீடுகளில் வழிபட்ட சிலைகளிலும் கரைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இந்தியாவின் மாசடைந்த நதியாக யமுனை கருதப்படுகிறது. நவராத்திரி விழாவின்போது கரைக்கப்படும் இத்தகைய சிலைகள் மூலம் அது மேலும் மாசடைகிறது.

அரசாங்கம் தொடர்ந்து அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வந்தாலும் அதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலை மாற்றி, சுற்றுச்சூழல் தொடர்பான உத்தரவுகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம்தான் நதிகள், காடுகள் போன்ற இயற்கை செல்வங்கள் நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon