மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

கேரளாவிடம் பாடம் கற்போம்!

கேரளாவிடம் பாடம் கற்போம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்கு பாடம் கற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலினும், இதேபோலவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று( அக்டோபர் 8) திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"ஆலயத்தில் அனைவரும் சமம், அனைத்து சமுதாயத்தினரும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்தும் உரிமையுள்ளவர்கள் என்பதை நிலைநாட்ட, திராவிட இயக்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆதிக்கப் பிரிவினரால் இதற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்ட நிலையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அற்புதமான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கு உரியவையாகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் பதவியேற்றவுடன் முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச் சட்டத்தை (ஏசிடி 15 ஆப் 2006) நிறைவேற்றினார்.இந்த மாற்றங்களை ஏற்க இயலாத ஒரு சிலர் எதிர்ப்புக்காட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்குத் தடையாணை பெற்றனர். இதில் “தமிழ்நாடு அரசின் (தி.மு.க அரசு)அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும்”, என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

ஆனால் அதனை அதிமுக அரசு இன்றளவும் கண்டு கொள்ளாத நிலையில் தான், அண்டை மாநிலமான கேரளாவில், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த 62 பேரை அர்ச்சகராக நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல் பட வேண்டுமென வலியுறுத்துவதுடன், மாநில அரசு இனியும் அலட்சியமாக செயல்பட்டால் தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் களம் காணும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டில் தந்தை பெரியார் எழுப்பிய முழக்கத்தை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது.கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு மதிமுக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்து, தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon