மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

தோனி வளர்ச்சிக்கு கங்குலி காரணமா?

தோனி வளர்ச்சிக்கு கங்குலி காரணமா?

கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு மகேந்திர சிங் தோனி 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். தோனியின் இன்றைய நிலைக்கு கங்குலியின் தியாகமே காரணம் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "அந்த சமயத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சோதனை நடந்து கொண்டிருந்தது. நல்ல தொடக்கம் அமைந்தால் மூன்றாம் நிலையில் கங்குலி களமிறங்குவதாகவும், சரியான தொடக்கம் அமையவில்லை எனில் இர்பான் பதான் களமிறக்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்த சமயம். அப்போது கங்குலி இரண்டு மூன்று போட்டிகளில் தோனியை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார். முதலில் எனக்காக அவரது ஓபனிங் இடத்தை விட்டுக்கொடுத்திருந்தார். சில கேப்டன்கள் மட்டுமே தங்கள் இடத்தை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். கங்குலி தோனிக்கு அவர் இறங்கும் 3 வது இடத்தை விட்டுக் கொடுத்திருக்காவிட்டால் தோனி பெரிய வீரராக ஆகியிருக்க வாய்ப்பில்லை" என்றார்.

தொடர்ந்து, "கங்குலி தொடர்ந்து அப்படிச் செய்து தனது இடத்தைத் தியாகம் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இளம் வீரர்களை கங்குலி அதிகமாக நம்பினார். அவருக்குப் பிறகு கேப்டனாக வந்த ராகுல் டிராவிட், தோனியை ஒரு முழுமையான கிரிக்கெட்டராகவும் சிறந்த ஃபினிஷராகவும் மாற்றினார். சில முறை மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து அவுட் ஆனார் தோனி. அப்போது டிராவிட், தோனியிடம் கடுமையாக நடந்துகொண்டார். இதையடுத்து தனது ஆட்டத்தை மாற்றிய தோனி சிறந்த ஃபினிஷராக மாறினார். அந்தக் காலகட்டத்தில் தோனி-யுவராஜ் சிங் பார்ட்னர்ஷிப்பை மறக்க முடியாதது" என்றார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon