மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

டெங்கு: 35 பேர் உயிரிழப்பு!

டெங்கு: 35 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் டெங்குவால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (அக் 8) தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்குவால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து படுக்கை வசதி இன்றி தரையில் படுக்க வைப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் டெங்குவால் 35 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது, “காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் பலியானதாகவும், டெங்கு காய்ச்சலால் 35 பேர் இறந்துள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்” கூறினார்.

இதுதவிர சென்னை, மதுரை, சேலம் மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போதிய வசதி இன்றியும், சிகிச்சை பெறமுடியாமலும் நோயாளிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 180 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சையளிக்கப்படுகிறது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 200 பேரில் 5 பேருக்கு டெங்கு பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 50க்கு மேற்பட்டோரும் , வைரஸ் காய்ச்சலுக்கு 150க்கு மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபோன்று திருச்சி, புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon