மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

விபத்தைக் கண்டறிந்து உதவ புதிய திட்டம்!

விபத்தைக் கண்டறிந்து உதவ புதிய திட்டம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக கண்டறிந்து உதவுதற்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு அமைப்பை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாக உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலையில் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது உடனடியாக உதவிக் கிடைக்கும் வகையில் ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள், அங்குச் செல்லும் வகையில் உதவி மையம் வாயிலாகத் தகவல் கொடுக்கப்படும். இவை அனைத்தும் ஐடி சார்ந்த பிராந்திய கட்டளை மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தை தொடங்க இரு மாநிலங்களுக்கும் ஏலதாரர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் ஏலதாரர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் பெரும் மூலதன முதலீடு செய்ய வேண்டும் என்பதால், திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு சிறிய தொகையை முன்னதாகவே வழங்கினால் நன்றாக இருக்கும் என ஏலதாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஒவ்வொரு 40-45 கிலோமீட்டருக்கும் இரண்டு நோயாளிகள் செல்லக் கூடிய ஆம்புலன்ஸ் அல்லது ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் நான்கு நோயாளிகள் செல்லக் கூடிய ஆம்புலன்சை ஆபரேட்டர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த திட்டத்திபடி, 24/7 கண்காணிப்பு வாகனங்கள் வழங்க வேண்டும். இத்திட்டம் இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறுவதை பொறுத்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு கிடைக்காததால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகமாகியுள்ளது என இந்திய நெடுஞ்சாலைகள் சுட்டிக் காட்டியுள்ளது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon