மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

ராமானுஜரின் சிம்மாசனம்!

 ராமானுஜரின் சிம்மாசனம்!

விளம்பரம்

ராமானுஜர் தன் சீடர்களுக்கு என்று 74 வார்த்தைகளை விளக்கினார். அதாவது 74 கட்டளைகளைப் பிறப்பித்தார். அதுபோலவே வைணவத்தை நிலைநிறுத்த, பரப்ப, தழைக்கச் செய்ய 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார்.

அந்த 74 பேர் யார் என்று அறிந்துகொண்ட பின்னர் நாம் ராமானுஜருக்கும் 74-க்கும் என்ன விசேஷத் தொடர்பு என்பதைப் பார்க்கலாமா?

74 சிம்மாசனாதிபதிகள் பெயர் வருமாறு...

1ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி, அவர் குமாரர் என்னாச்சான், அவர் குமாரர் பிள்ளையப்பன்.

2. பெரிய நம்பியின் குமாரர் ஸ்ரீபுண்டரீகர்

3.திருக்கோட்டியூர் நம்பின் குமாரர் தெற்காழ்வான்

4.திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத் தோளுடையான், 5. பெரிய திருமலை நம்பியின் குமாரர் ராமானுஜன், திருமலை நம்பி, 6. கூரத்தாழ்வான் குமாரர் பட்டர், சீராமப்பிள்ளை, 7. முதலியாண்டான் குமாரர் கந்தாடையாண்டான், 8. நடுவிலாழ்வான், 9. கோமத்தாழ்வான், 10. திருக்கோவலூராழ்வான், 11. திருமோகூராழ்வான், 12. பிள்ளை பிள்ளையாழ்வான், 13. நடாதூராழ்வான், 14. எங்களாழ்வான், 15. அனந்தாழ்வான், 16. மிளகாழ்வான், 17. நெய்யுண்டாழ்வான், 18. சேட்டலூர் சிறியாழ்வான், 19. வேதாந்தியாழ்வான், 20. கோயிலாழ்வான், 21. உக்கலாழ்வான், 22. அரணபுரத்தாழ்வான், 23. எம்பார், 24. கிடாபியாச்சான், 25. கணியனூர் சிறியாச்சான், 26. ஈச்சம்பாடியாச்சான், 27. கொங்கிலாச்சான், 28.ஈச்சம்பாடி ஜீயர், 29. திருமலை நல்லான்.....

இப்படியாக மொத்தம் 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர்.

இதில் இன்னும் ஒரு சிறப்பம்சம் உண்டு.

74 சிம்மாசனாதிபதிகளும் ராமானுஜரால் நேரடியாக நியமனம் செய்யப்படவர்கள். இவர்கள் வைணவம் என்னும் கொள்கையை உயர்த்திப் பிடிக்க, சின்னச் சின்ன கிராமங்கள் தோறும் வைணவத்தைக் கொண்டு செல்லுமாறும்... வைணவத் திருக்கோயில்களில் ராமானுஜர் ஏற்படுத்திய முறைமை கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் ராமானுஜரால் நியமிக்கப்பட்டவர்கள்.

ராமானுஜர் எத்தனையோ புரட்சி செய்திருக்கிறார். அந்தப் பல புரட்சிகளை நாம் இதுகாறும் பல அத்தியாயங்களில் பார்த்தோம். ஆயினும் பெண்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தையும் பார்த்தோம்.

ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றினார், பிச்சை எடுத்து உண்ணுகையில் திருப்பாவை பாடிக் கொண்டிருந்தபோது கதவைத் திறந்த சிறு பெண்ணை அப்படியே விழுந்து சேவித்தார் என்று பல வைபவங்களைப் பார்த்தோம்.

அதையெல்லாம் விட முக்கியமாக... பெண்கள் என்றால் ஆன்மிக நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற நிலையே பெரும்பாலும் நிலவியிருக்க... 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்தவர் ராமானுஜர்.

அத்துழாய்,ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராச வல்லி ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்திலும் சமய நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்தவர் ராமானுஜர்.

ராமானுஜர் சிம்மாசனாதிபதிகளை தேர்ந்தெடுத்தது ஜாதியின் அடிப்படையிலோ, வர்ணத்தின் அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ அல்ல.

முழுக்க முழுக்க வைணவத்தின் மீதான புலமை, சரணாகதி தத்துவத்தின் மீதான பிடிப்பு, ஆழ்வார்கள் அருளிச் செயலில் நுண்மான் நுழைபுலன் இப்படி ஒவ்வொரு தகுதியாக பார்த்துதான் தனது கட்டளைப் படி நியமித்த்தார் ராமானுஜர். அதுவும் வைணவ சிஷ்யர்களில் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சில பணிகளில் ஈடுபடுத்தியது ராமானுஜர் செய்த திருவரங்கப் புரட்சி என்றே சொல்லலாம். இதில் பலருக்கும் ஒரு தெளிவு வேண்டும். சிம்மாசனாதிபதிகளில் பெண் பெயர்கள் இருப்பதைப் பார்த்து பலரும் பெண்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

அந்த வகையில்தான் அம்மங்கி அம்மாள் என்பவர்.

அம்மங்கியம்மாள் மீதான ராமானுஜரின் அபிமானம் மிகவும் போற்றத்தக்கது. அம்மங்கியம்மாள் என்பவர் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண். தினந்தோறும் ராமானுஜரைக் கண்டு வணங்குவாள். அவரது உபதேசங்களைக் கேட்பாள். ராமானுஜர் ஒரு சந்தர்ப்பத்தில் சோழ மன்னனின் தொந்தரவால், வெள்ளை உடுத்தி மேல் நாட்டுக்கு அதாவது திருநாராயணபுரத்துக்கு சென்றார் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம் அல்லவா? அப்போது திருவரங்கமே ராமானுஜர் இல்லாமல் வெறிச்சோடியது.

தினம் தினம் அம்மங்கியம்மாள் ராமானுஜரைத் தேடி வருவார். ‘சுவாமி இதோ வருவார் அதோ வருவார் ‘ என்று சிஷ்யர்கள் சொல்லிக் கொண்டே இருந்தனர். பிறகுதான், ராமானுஜர் மேல்கோட்டை திருநாராயணபுரத்துக்கு சென்றுவிட்டார் என்று அறிந்தார் அம்மங்கியம்மாள்.

ராமானுஜர் திருவரங்கம் திரும்புவதற்கு வருடக் கணக்கில் ஆகும் என்று அறிந்த அம்மங்கியம்மாள் மிகவும் வருந்தினார். அவர் வருத்தம் ராமானுஜர் போய்விட்டாரே என்பதற்காக அல்ல. திருவரங்கத்தைப் பிரிந்து நம்பெருமாளைப் பார்க்காமல் ராமானுஜர் அங்கே என்ன கஷ்டப்படுவாரோ என்பதற்காகத்தான்.

இந்த நிலையில் அம்மங்கி அம்மாள் ஒரு முடிவெடுத்தார். திருவரங்கம் கோயிலுக்குச் சென்று நம்பெருமாளின் தீர்த்தம், வஸ்திரம், மாலை, திருத்துழாய் போன்ற பிரசாதங்களை அதிகமாகவே எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

எங்கே புறப்பட்டார்?

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்களின் மூலம் ஆழ்வார்கள் புகழ் மட்டுமல்ல, ராமானுஜர் புகழ், ராமானுஜ அடியார்களின் புகழ் ஆகியவையும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பரவலாக சென்று அடைந்துள்ளன. வைணவக் காற்று திக்கெட்டும் பரவ ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் அறப்பணி தொடர்கின்றது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon