மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

கனிமொழி சொன்ன குட்டிக் கதை!

கனிமொழி சொன்ன குட்டிக் கதை!

சென்னை அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் நேற்று (அக்டோபர் 21) திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மற்ற அரசியல் தலைவர்களைப் போலவே கனிமொழியும் மாணவர்களுக்கு குட்டிக் கதை ஒன்றை சொன்னார்.

அவர் பேசும்போது, “இங்கே கதை சொல்லக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள் அனுமதியோடு நானும் ஒரு குட்டிக் கதை சொல்லுகிறேன்.

மகாபாரதக் கதை ஒன்று உங்களுக்குச் சொல்ல வேண்டும். துரோணாச்சாரியார் என்ற பெயர் வடநாட்டில் எல்லோராலும் கொண்டாடக்கூடிய ஒரு பெயர். மிகச் சிறந்த ஆசிரியர் என்று அவரை அனைவரும் அங்கே கொண்டாடுகிறார்கள். மத்திய அரசு அவர் பெயரால் விருது கூட கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் துரோணாச்சாரியார் விருது என்று கொடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?

துரோணாச்சாரியார் என்பவர் பஞ்ச பாண்டவர்களுக்குக் குருவாக இருந்தவர். ஒருமுறை காட்டில் பஞ்ச பாண்டவர்களோடு பயிற்சி எடுக்க துரோணாச்சாரியார் செல்கிறார். அப்போது ஒரு நாயின் வாயில் அம்புகள் தைக்கப்பட்டிருக்கிறது. அந்த நாயின் உடலில் வேறு எங்கும் அம்பு பாயவில்லை. வாயில் மட்டும் அம்புகள் இருக்கின்றன. அதாவது அந்த நாயின் வாய் கட்டப்பட்டிருக்கிறது. அந்த அம்புகளை எடுத்தால் நாய் வழக்கம்போல குரைக்கலாம்.

இதைப் பார்த்ததும் துரோணாச்சாரியார் அதிர்ந்து போகிறார். ‘உலகத்திலேயே என்னைத்தான் ஒரு சிறந்த வில்வித்தைக்காரனாக ஆக்கிக்காட்டுகிறேன். ஆனால், என்னைவிட சிறந்த ஒரு வில்வித்தைக்காரன் இந்தக் காட்டில் இருக்கிறானா?’ என்று அர்ஜுனனுக்கு கோபம். தனது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்று துரோணாச்சாரியாருக்கும் குழப்பம். யார் அந்த வில்வித்தைக்காரன் என்று தேடியபோதுதான் ஏகலைவன் என்பது தெரியவந்தது.

அவன் துரோணாச்சாரியாரிடம் வந்து, ‘எனக்கும் தாங்கள் வில்வித்தை சொல்லித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். அப்போது துரோணர், ‘நான் க்ஷத்திரியர்களுக்கு மட்டும்தான் சொல்லிக் கொடுப்பேன். நீ அந்தச் சாதியைச் சேர்ந்தவன் இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதனால் வருத்தமான ஏகலைவன்... துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கு வில்வித்தை சொல்லிக் கொடுத்துவிட்டு போன பிறகு அவர் நின்றிருந்த இடத்தின் மண்ணை எடுத்து அதில் துரோணரைப் போலவே ஒரு சிலை செய்தான். துரோணரின் சிலையை வைத்து அதன் முன் நின்று தீவிர முயற்சி செய்து வில்வித்தையை கற்றுக்கொண்டு சிறந்தவன் ஆனான்.

இதை அறிந்த துரோணாச்சாரியார் அதிர்ந்தார். அப்போது அவர் ஏகலைவனிடம் கேட்ட குருதட்சணை என்ன தெரியுமா?

ஏகலைவனின் வலது கை கட்டை விரல். ஏகலைவன் அதிர்ந்து போகிறான். நிஜமா என்று கேட்கிறான். ஆமாம் என்று சொன்னதும், உடனே தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன்.

இந்த துரோணாச்சாரியாரைத்தான் வடநாடு கொண்டாடுகிறது. ஆனால், சாதியைக் காரணமாக வைத்துக்கொண்டு ஒருவனது திறமையை அழித்த துரோணாச்சாரியாரைத் தமிழ்நாடு கொண்டாட முடியுமா? தமிழ்நாடு அவரை கொண்டாட மறுக்கிறது. இதையெல்லாம் சொல்லித் தந்தது பெரியார்.

நிச்சயமாக பள்ளிகள் தந்தை பெரியாரை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். நாம் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பெரியார். அவர்தான் நம் அடையாளம். பெரியாரைப் பற்றி மாணவர்களிடம் சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில் வந்து இப்படியெல்லாம் பேசுகிறாரே என்று நினைக்காதீர்கள். பள்ளிக்கூடங்களில்தான் பேச வேண்டும். நாளைய பிரச்னைகளுக்கு தீர்வு காணப் போகிறவர்கள் மாணவர்களாகிய நீங்கள்தான்” என்று குறிப்பிட்டார் கனிமொழி.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon