மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்)!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்)!

2024ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தை குடியமர்த்தப் போவதாக உறுதியளித்திருக்கும் கனடா - அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா, டிரான்ஸ்வாலில் மாயே மஸ்க் மற்றும் எர்ரோல் மஸ்க் இணையர்களுக்குப் பிறந்தார். இவருக்கு கிம்பல் என்ற தம்பியும், டோஸ்கா என்ற தங்கையும் உள்ளனர். 1980ஆம் ஆண்டிலேயே இவருடைய தந்தையும், தாயும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சிறுவயது முதலே எலான் மஸ்க் படிப்பில் தீவிர ஆர்வம்கொண்டிருந்தார். தனது 10 வயது முதலே கணினி புரோகிராமில் மிகுந்த ஆர்வம்கொண்டு விளங்கினார். 1989ஆம் ஆண்டு தாயின் உறவினர் வீட்டுக்கு கனடா சென்றார். அங்கு குறைந்த ஊதியத்துக்கு வேலை பார்த்தார்.

1997ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றார் எலான் மஸ்க். மேலும், வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினசில் பொருளாதாரப் பட்டமும் பெற்றார். 1995ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் முனைவர் பட்டம் படிக்க கலிஃபோர்னியா சென்றார். ஆனால், இரண்டு நாள்களில் அங்கிருந்து திரும்பி விட்டார்.

1999ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான் இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்தது. இவர் தன்னுடைய சகோதரருடன் இணைந்து தொடங்கிய ஜிப் 2 நிறுவனம் மூலம் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய தேடு தளமாக இருந்த அல்டாவிஸ்டாவைக் கையகப்படுத்தினார்.

1999ஆம் ஆண்டு எலான் மஸ்க் எக்ஸ்.காம் என்ற நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்தார். இது ஒரு ஆன்லைன் நிதி மற்றும் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் நிறுவனமாகும். ஒரு வருடத்துக்குப் பின்னர் கான்ஃபினிட்டி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர், இந்த நிறுவனத்தின் பெயர் பேபெல் என்று மாற்றப்பட்டது. 2000ஆம் ஆண்டில் மஸ்க் இந்த நிறுவனத்தின் தலைவரானார். 2002ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் இ-பே நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தில் 11.7 சதவிகிதத்துடன் அதிகப் பங்கை கொண்டிருந்தவர் மஸ்க் ஆவார். இதன்பின்னர் இணையத் தொழில்களில் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு விண்வெளி பொறியியல் மற்றும் மாற்று எரிசக்தித்துறையில் முதலீடு செய்தார்.

2003ஆம் ஆண்டில் மார்டின் எபர்ஹார்டு மற்றும் மார்க் டார்பென்னிங் ஆகியோரிடம் நிதியுதவி பெற்று டெஸ்லா மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார். உலகளவில் மின்னணு வாகனத் தயாரிப்பில் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக டெஸ்லா விளங்குகிறது. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி டெஸ்லா நிறுவனத்தில் மட்டும் 33,000 பணியாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் பங்குகளில் இவர் 20 சதவிகிதத்தைக் கொண்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 7 பில்லியன் டாலர்களாகும். 2006ஆம் ஆண்டில் சோலார்சிட்டி உருவாக்கத்துக்கான ஆரம்ப கருத்து மற்றும் மூலதன உதவிகளை வழங்கினார். பின்னர் அதே ஆண்டில் தனது உறவினருடன் இணைந்து சோலார் சிட்டி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அமெரிக்காவில் சோலார் மின் தயாரிப்புகளில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் உள்ளது. சோலார் சிட்டி மற்றும் டெஸ்லா இரண்டும் சர்வதேச அளவில் புகழ்பெற்றன.

2013ஆம் ஆண்டில் அதிவேக ரயில் திட்டமான ஹைபர்லூப் திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். ஹைபர்லூப் என்பது குழாய்களுக்குள் செலுத்தப்படும் விசையின் மூலம் ரயில்களை அதிவேகமாகச் செலுத்தும் திட்டமாகும். சில நாடுகளில் இதற்கான சோதனை முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்தத் திட்டத்தில் பயன்படும் உபகரணங்கள் தயாரிப்பில் மஸ்க் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பணியில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டில் ஓபன் ஏஐ என்ற ஆய்வு நிறுவனத்தை மஸ்க் தொடங்கினார். 2016ஆம் ஆண்டில் நியூராலிங் நிறுவனத்தில் இணை நிறுவனரானார். இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். இது மனித மூளையைச் செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகும். இந்த ஆண்டில் 'தி போரிங் கம்பனி' என்ற நிறுவனத்தையும் இவர் தொடங்கினார்.

இவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களைக் குடியேற வைப்பதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்குள் மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று குடியேற வைப்பேன் என்ற அசாத்திய உறுதிமொழியை இவர் அளித்துள்ளார். இதை நிறைவேற்ற இந்தக் கால இடைவெளியே மிக அதிகமானது என்று இவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார். வெறுமனே தொழில்முனைவோராக மட்டுமே இல்லாமல் தனது அசாத்திய திறமைகளால் உலகம் முழுவதும் கவனிக்கப்படக்கூடிய ஒரு மனிதராக எலான் மஸ்க் விளங்குகிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத கணக்குப்படி இவருடைய நிகர சொத்து மதிப்பு 20.8 பில்லியன் டாலர்களாகும்.

“முதலில் எதையும் சாத்தியம் என்று நிறுவ வேண்டும்

மற்ற செயல்கள் அடுத்தடுத்து நிகழும்” - எலான் மஸ்க்

- பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon