மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சென்டம் மாணவிகளுக்கு ஆசிரியை கொடுத்த பரிசு!

சென்டம் மாணவிகளுக்கு ஆசிரியை கொடுத்த பரிசு!

பொதுவாகக் குழந்தைகளிடம், ‘நீ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால், உன்னை ஊருக்கு அழைத்துச் செல்வேன்’ எனச் சொல்லி படிக்க வைப்பதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இங்கு ஓர் ஆசிரியை மாணவர்கள் சென்டம் எடுத்ததற்குப் பரிசாக விமானத்தில் அழைத்துச்சென்று மாணவிகளைச் சந்தோஷப்படுத்தியுள்ளார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியுள்ளார். சென்னை, அம்பத்தூரில் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியை செல்வகுமாரி, பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு சமூக அறிவியல் பாடம் கற்பித்து வருகிறார்.

வழக்கம்போல், ஒருநாள் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியை செல்வகுமாரி சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவிகளைச் சொந்த செலவில், விமானத்தில் அழைத்துச் செல்வேன் என மாணவிகளிடம் கூறி நன்றாகப் படிக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் .

அதன்படி, நூறு மதிப்பெண் எடுத்த மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து ஆசிரியை செல்வகுமாரி கூறுகையில், “வரைபடங்களில் விமான வழித்தடங்கள் குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் மாணவிகளுக்கு இந்த பரிசை அளிக்கலாம் என நினைத்தேன். கடந்த கல்வி ஆண்டின்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் என் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டும் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். சொன்னபடி, 100 மதிப்பெண் எடுத்த இரு மாணவிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றேன். கோவையைச் சுற்றி பார்த்த பின்பு, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு திரும்பினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவரது செயல் பல ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon