மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

முன்னரே திட்டமிடப்பட்ட இந்தோ - சீனப் போர்!

முன்னரே திட்டமிடப்பட்ட இந்தோ - சீனப் போர்!

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கிய போரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. இரு நாட்டையும் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தப் போரில் இந்தியா பலத்த பின்னடைவைச் சந்தித்தது.

இந்த நிலையில், இந்தப் போர் திடீரென வெடித்தது அல்ல என்றும் சீனா பல ஆண்டுகளாக இந்தப் போருக்கு திட்டமிட்டுள்ளது என்பதும் ஆச்சர்யமான ஒன்று. China’s India War: Collision Course On The Roof Of The World என்ற பெயரில் பெர்டில் லைனர் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். அதன் சில பகுதிகளின் சாரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:

இந்தப் போரின்போது இந்திய பிரிகேடியர் ஜான் தல்வி என்பவரைச் சீனா சிறைபிடித்தது 1963 மே மாதம் வரை சீன சிறையில் இருந்த அவர் Himalayan Blunder: The Angry Truth about India’s Most Crushing Military Disaster என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், இந்தியாவுக்கு எதிராக எவ்வாறு சீனர்கள் திட்டமிட்டுத் தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர் என்பது குறித்து விவரித்துள்ளார். போர் தொடங்குவதற்கு முன்னதாகவே சீனா வலுவான சாலையை அமைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், போர் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே இந்திய மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல், ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தங்கள் உளவாளிகளை வடகிழக்கு எல்லை மற்றும் ஏனைய பகுதிகளுக்குச் சீனா அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் சுமை தூக்குபவர்கள், கோவேறு கழுதையை மேய்ப்பவர்கள் போன்று வேஷமிட்டு உளவு பார்த்தனர். அவர்கள் மூலம், இந்தியாவின் போர் வரிசை, நிலப்பகுதி அமைப்பு மற்றும் ராணுவ மூலோபாயம் குறித்த தகவல்களை சீன ராணுவம் சேமித்தது. பின்னர் போர் சமயத்தின்போது, இந்த உளவாளிகள் சீன ராணுவத்தினருக்கு வழிகாட்டியுள்ளனர்.

எல்லைப் பகுதியில் வெளி அரண்களை இந்தியா அமைப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே இந்தப் பணிகளை சீனா தொடங்கிவிட்டது என்பதன் மூலம், இந்தியாவின் வெளி அரண் அமைத்த செயல் காரணமாகத்தான் சீனா தாக்குதலில் இறங்கியது என்ற கூற்றும் பொய்யாகிறது.

இவையனைத்தையும்விட, தாக்குதலுக்கான தேதியும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆம், அக்டோபர் 20, 1962 என்பது இந்தோ - சீனா போர் மூண்ட தினம் என்பதையும் தாண்டி, அமெரிக்கா - சோவியத் இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த தினம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. கியூபாவில் தனது ஏவுகணைகளை சோவியத் ஒன்றியம் குவித்து வைத்தது. இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராகத் துருக்கியில் தனது ஏவுகணைகளை அமெரிக்கா குவித்தது. இதனால் மூன்றாம் உலகப் போர் நிகழும் என உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. சோவியத்துடனான தனது நெருக்கம் மூலமாக கியூபாவில் அந்நாட்டு ஏவுகணைகளைக் குவிக்கப்போவதை அறிந்த சீனா. அக்.20ஆம் தேதியைத் தேர்வு செய்தது. தங்கள் நாட்டுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்திய - சீன போரில் அமெரிக்கா தலையிடாது எனவும் சீனா திட்டமிட்டிருந்தது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon