மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

சண்டே சர்ச்சை: மெர்சல்: திசையெட்டும் ஒலிக்கும் உரிமைக் குரல்கள்!

சண்டே சர்ச்சை: மெர்சல்: திசையெட்டும் ஒலிக்கும் உரிமைக் குரல்கள்!

கபிஷ் பாலகிருஷ்ணன்

‘விஜய் படம் ரிலீஸ் ஆகுறதுலதான் இம்புட்டு நாளா பிரச்னையும், சர்ச்சையும் இருந்துச்சின்னு நெனச்சா, இப்போ படம் வெளியானதுக்கு அப்புறமும் தொடருதேன்னு அம்புட்டு பேரும் பரிதாபப்படுறதா, அல்லது ஆதங்கப்படுறதா?’ என்று குழம்பித் திரிகிறார்கள் சினிமா ரசிகர்கள்.

என்றைக்குத் தலைவா ‘தி டைம் டு லீட்’ன்னு தலைப்பு வைத்தாரோ அன்றைக்கு விஜய் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்ட சர்ச்சை வேதாளம் இன்றுவரை கீழ இறங்கவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்யும் நிலையில் விஜய் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கிச் சில வரலாற்றுப் பதிவுகளை விட்டுச்செல்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. மெர்சல் படத்தின் சில வசனங்களை ஒட்டிச் சர்ச்சை எழ, கோடம்பாக்கம் முதல் டெல்லி வரை அதன் எதிரொலிகள் அழுத்தமாகக் கேட்கின்றன.

விஜய் நடிப்பில் தீபாவளி (அக்.18) அன்று வெளியான மெர்சல் திரைப்படம், வெளியாவதற்கு முன்பு வரையில் கேளிக்கை வரிச் சிக்கல், திரைத்துறை வேலை நிறுத்தம் எனப் பல பிரச்னைகளால் அதன் வெளியீடு கேள்விக்குறியானது. அதிலிருந்து விடுபடும் நேரத்தில், விலங்குகள் நலவாரியத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுவும் முடிவுக்கு வந்து படம் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது.

பிரச்னை முடிந்து படம் வெளியாகிவிட்டது என்று படக் குழுவினர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பழிப்பு, மருத்துவத்துறை போன்றவை குறித்த விமர்சனக் கருத்துகளுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் சில மருத்துவ அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துவருவதோடு அந்தக் காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரிவருகின்றனர்.

சுதந்திர இந்தியாவில் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விமர்சனக் கருத்துகளை முன்வைக்க, அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. இந்த நிலையில் ஒரு படைப்பாளி தனது கருத்தை அவனது படைப்பின் மூலம் வெளியுலகத்துக்கு தெரிவிக்க சுதந்திரம் இருக்கும்போது, அரசின் திட்டங்களை விமர்சித்து மெர்சல் படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளை நீக்கக் கோருவது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று பலரும் மெர்சல் படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

சென்சார் போர்டு எதற்கு இருக்கிறது?

இயக்குநர் பா.இரஞ்சித் “மெர்சல் படத்தில் அரசின் புதிய திட்டங்களால் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைத்தான் காட்சிகளாக வைத்துள்ளனர். மக்களுடைய கருத்தே வசனங்களாகப் பிரதிபலித்துள்ளது” என்று தெரிவிக்க, “பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் படத்தின் வசனங்களையும் காட்சிகளையும் நீக்கச் சொல்லி வற்புறுத்துவதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயகச் சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம். ஓர் அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? தான் நினைத்ததைச் சொல்லும் முழு கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது” என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

“மெர்சல் படத்தில் தனிப்பட்ட யாரையும் பாதிக்கும் வகையில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே காட்சிகள் இடம்பெற்றுள்ளன” என்று தணிக்கைக் குழுவின் மண்டல அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார். “தணிக்கை செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ள ‘மெர்சல்’ படத்தை மறுபடியும் தணிக்கை செய்யாதீர்கள். எதிர் விமர்சனம் தர்க்க ரீதியான பதிலாக இருக்க வேண்டுமே தவிர விமர்சிப்பவர்களின் வாயை அடைக்காதீர்கள். இந்தியா வெளிப்படையாகப் பேசும்போதுதான் வளரும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, “கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள்” என்று கூற, “ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா,என எல்லோரும் சேர்ந்திருப்பதுதானே இந்தியா? இல்லையெனில் சொல்லிவிடு, நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்” என்று இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

அரசியல் அரங்கில் எதிர்ப்புக் குரல்கள்

“மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்” என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மெர்சல் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டுக் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த செயல்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், விஜய்யை தங்கள் பக்கம் வளைத்து போட வேண்டும் என்று எண்ணி அவர்கள் இவ்வாறு ‘பிளாக் மெயில்’ செயலில் ஈடுபடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவிக்க, ‘ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பாஜக செயல்பட்டுவருகிறது. பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்’ என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் முதல் திரைத்துறைப் பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரும் மெர்சல் படத்துக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் தங்களுடைய ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

படைப்பாளியின் பங்கு என்ன?

கடந்த காலங்களிலும் திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள், வசனங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகள் என்று அவ்வப்போது கடும் ஆட்சேபம் தெரிவிப்பது நடந்தேறும் நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. கமல் நடிப்பில் உருவான விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம் படங்கள் வெளியானபோது படத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகளுக்கு எதிராக பிரச்னைகள் உருவானபோது அவற்றுக்கு எதிராகக் கமல் எதிர் வாதத்தை முன்வைத்ததோடு தனது கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடினார்.

இதேபோன்று, 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை மையமாகக்கொண்டு ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம் எடுக்கப்பட்டது. தண்ணீர்ப் பிரச்னையை மக்கள் தாங்களாகவே தீர்ப்பதற்கு முன்வந்தால் அதற்கு அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் எத்தகைய தடங்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதைத் துணிச்சலாகக் கூறியிருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர்.

இதற்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சேபம் தெரிவித்தபோது இயக்குநர் கே.பாலசந்தர், “எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இடம்பெறாத கருத்துகளையா நான் என் படத்தில் கூறிவிட்டேன்?” என்று அரசின் கருத்துக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்.

இப்படியாகப் படைப்பாளிகள் அனைவரும் தங்களுடைய கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட அரசு மற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் பல தளங்களில் குரல் கொடுத்துள்ளனர். ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்குப் பலத்த ஆதரவு கிடைத்துவரும் நிலையில் படம் சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் சாதிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. படத்தில் நடித்துள்ள விஜய்யோ, இயக்குநர் அட்லீயோ, வசனகர்த்தா ரமண கிரிவாசனோ எதுவும் பேசவில்லை. சர்ச்சை பற்றிப் பேசியுள்ள தயாரிப்பாளர் என்.ராமசாமியின் குரலிலும் சமரச உணர்வே நிறைந்துள்ளது.

“படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் திரைப்படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவனின் கனவுதான் இந்தப் படத்தின் கரு. பாஜக தலைவர்களின் பார்வையில், அவர்கள் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. எதைப் பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கிறோம்” என்று ராமசாமி கூறியுள்ளார்.

மெர்சல் படத்தின் கருத்துச் சுதந்திரத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும் நிலையில் படத் தயாரிப்பாளர் படத்திலுள்ள காட்சிகளை நீக்குவது குறித்துப் பேசியது அதிர்ச்சி அளித்தது. எனினும், எந்தக் காட்சியையும் நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தயாரிப்பு தரப்பு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. எதிர்ப்புக்குப் பணியாமல் இருப்பது படைப்புச் சுதந்திரத்தின் முக்கியமான அம்சம் என்பதால் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

எனினும் இதை மெர்சல் படக் குழுவின் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தணிக்கைக் குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களைத் தனி நபர்களின் அல்லது அமைப்புகளின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது என்பதில் ஐயமில்லை. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று திரைத்துறையினர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மெர்சல் படக் குழுவினர் பேசாத போதும் படைப்பின் சுதந்திரத்துக்காகத் தமிழ்த் திரையுலகிலும் அரசியல் அரங்கிலும் காத்திரமான குரல்கள் எழுந்திருப்பது ஆரோக்கியமானது என்றே சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon