மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் அழகு விவாதத்துக்குரிய பொருளா?

சிறப்புக் கட்டுரை: பெண்ணின்  அழகு  விவாதத்துக்குரிய பொருளா?

சா. வினிதா

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று அதன் விவாத நிகழ்ச்சியான ‘நீயா நானா’. தமிழில் பல்வேறு முக்கியமான விவாதங்களைச் சாத்தியப்படுத்திய நிகழ்ச்சி இது. குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இந்த விவாத நிகழ்ச்சி தற்போது விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ள விஷயமே விவாதப் பொருளாகியுள்ளது. ‘தமிழக பெண்கள் அழகா, கேரளா பெண்கள் அழகா’ என்ற தலைப்பு கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்த விவாதம் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை அனுமானித்து எதையும் பேச முடியாது. எனினும், இந்தத் தலைப்பில் விவாதம் என்பது தேவையா என்னும் கேள்வியைப் புறந்தள்ளிவிட முடியாது. காரணம், அழகு, அதுவும் பெண் அழகு விவாதப் பொருளாவது என்பது ஏற்கெனவே சமூகத்தில் ஆழமாக வேரோடியுள்ள சில விரும்பத்தகாத போக்குகளை வலுப்படுத்தவே உதவும்.

அழகுதான் முக்கியமா?

பெண்ணுடைய ஆளுமையில் எத்தனையோ அம்சங்கள் இருக்க, அவளுடைய தோற்றத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் அழகு என்பதை ஏன் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும்? ஆணின் கண்ணோட்டத்தில் அழகாக இருக்க வேண்டிய சுமை பெண்ணின் மீது காலங்காலமாகச் சுமத்தப்பட்டு வருகிறது. அதை மீண்டும் உறுதி செய்வதாகத்தானே இத்தகைய விவாதங்கள் அமையும்?

இன்று பெண்கள் நுழையாத துறைகள் இல்லை. அவர்கள் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டு பல்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நாம் இன்னும் அவள் புற அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பெண்களின் பன்முகத் திறன்கள் எத்தனையோ இருக்க, இன்னமும் ஏன் அழகை வைத்து மட்டுமே அவர்களை எடை போட வேண்டும்?

“இந்த விவாதத்தில் அழகு என்பதை எதை வைத்து வரையறுத்து இருக்கிறார்கள்? அழகு என்பது தோற்றம் அல்லது நிறத்தைச் சார்ந்ததா? அழகு என்பது, பிறரை நேசிப்பது, மதிப்பது, திறமைகளை வெளிக்கொணர்வதில்தான் இருக்கிறது. அழகு என்பது தோற்றத்தை அல்ல, குணாதிசயங்களைச் சார்ந்த ஒன்றாகும். தோற்றம், நிறம் மட்டுமே அழகு என்றால் அது அபத்தமான கருத்துமாகும். புற அழகை வைத்து ஒரு விவாதத்தை நடத்துவது கண்டனத்துக்குரியது” என கவிஞரும் பெண்ணியச் சிந்தனையாளருமான சல்மா கூறுகிறார்.

புண்படுத்தக்கூடிய ஒப்பீடுகள்

தொலைக்காட்சியில் விவாதம் நடத்துவதின் முக்கிய நோக்கம், ஒரு சம்பவம் அல்லது விஷயம் குறித்து மக்களிடம் நல்ல புரிதலை ஏற்படுத்துதல், அதன்மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர ஊக்குவித்தல் போன்றவையாகும். ஆனால், இந்த விவாதத்தினால் ஏற்படக்கூடிய விளைவு என்ன? ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணுடன் ஒப்பிட்டு, இவர் அழகு, இவர் அந்த அளவுக்கு அழகில்லை என்று சொல்வதினால், யாருக்கு என்ன பயன்? ஒருவரை அழகு என்று சில அளவுகோல்களை வைத்துச் சொல்லும்போது அந்த அளவுகோல்களின்படி அழகு இல்லாதவர்கள் மனம் காயப்படத்தானே செய்யும்?

‘அழகு’ என்பது பிறக்கும் இடம், பரம்பரை, தட்பவெட்ப நிலை, ஊட்டச்சத்து போன்றவற்றுக்கேற்ப உருப்பெறக்கூடியது. பெருமளவில் நம் கையில் இல்லாத இந்த அழகை ஒப்பிட்டுப் பொதுவெளியில் விவாதிப்பதில் என்ன பொருள் இருக்கிறது?

பெண் உடல் என்பது விவாதப் பொருளா?

திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பெண்களைப் பண்டமாக்கும் போக்கு குறித்த விமர்சனங்கள் தீவிரமாக எழுந்துவரும் இன்றைய நிலையில் பெண்களின் அழகை வைத்து நடக்கும் இந்த விவாதத் தலைப்பு பலரையும் கோபப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. “எனக்கு இதைக் கேட்டதுமே கோபமாக இருக்கிறது. இது ஒரு மோசமான விவாதம். இது விவாதத்துக்கான பொருளே அல்ல. கிடைப்பதெல்லாத்தையும் வைத்து பெண்ணின் உடல் பற்றிப் பேசலாமா?” என்று வெடிக்கிறார் பேராசிரியரும் சமூக ஆர்வலருமான பர்வீன் சுல்தானா.

“முதலில் இந்த விவாதத்தை ஏற்பாடு செய்தவர்களைவிட, அதில் கலந்துகொண்டு பேசவிருக்கும் நபர்களுக்கு இது பேசுவதற்குச் சரியான பொருள் அல்லவென்று தெரிய வேண்டும். இன்னும் இதுபோன்ற விஷயங்களை மேடை போட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்கும்போதே கோபமாக இருக்கிறது. என்னைக் கேட்டால், தெருவில் போகும் பெண்ணைப் பார்த்து மார்க் போடும் ஆண்களுக்கும் மேடையில் உட்கார வைத்து மார்க் போடுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பல முக்கியமான விவாதங்களை முன்னெடுத்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி இதுபோன்ற விவாதத்தை எடுத்திருக்கிறது என்பது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது” என்பவர், இதற்கு மேல் இது பற்றிப் பேச விரும்பவில்லை என ஆக்ரோஷத்துடன் கூறுகிறார் பர்வீன் சுல்தானா.

நாட்டில் பேச வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்ற நிலையில், ஒரு சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தக்கூடிய விவாதம் இந்தச் சமுதாயத்துக்கு மிகவும் அவசியமா என முகநூல் பக்கத்தில் சமூக செயல்பாட்டாளர் கீதா நாராயணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் நாட்டையும்,கேரளாவையும் ஒப்பிட வேண்டுமெனில் எத்தனையோ தலைப்புகளில் அதை செய்ய முடியும். ஆட்சி, தொழிற்சங்கங்கள், நீர் மேலாண்மை, பொது சுகாதாரம், திரைத்துறை, இரு பக்கமும் உள்ள நாட்டுபுற வடிவங்கள், கவிதைகள் என விஷயங்களா இல்லை? இரு பக்கமும் உள்ள பெண் விவசாயிகள் சங்கங்களை அழைத்து இரு பக்க அனுபவத்தையும் கேட்கலாம் என ஏன் தோன்றவில்லை? ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இரு மாநிலங்களில் உள்ள ஆண்களில் யார் ஆண்மை (அபத்த வார்த்தைதான்) அதிகமுடையோர் என்று ஒரு தலைப்பு வைத்திருந்தால் தமிழகம் எப்படி வெகுண்டெழுந்திருக்கும்? எத்தனைக் கலாசார புத்திமதிகள் சொல்லப்பட்டிருக்கும்? இப்போது ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?" எனப் பதிவிட்டுள்ளார்.

அழகின் மறுபக்கம்

அழகு என நாம் பொதுவாகக் கருதும் பல அம்சங்கள் இயற்கையில் அமைந்தவை. அந்த அழகை மெருகேற்றிக்கொள்வது சாத்தியம்தான் என்றாலும் அடிப்படையான அம்சங்கள் பிறவியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொருவர் பார்வையிலும் அழகு என்பது வேறுபடும் என்றாலும் பெண்களிடத்தில் சில அம்சங்களை அழகு என இந்தச் சமுதாயம் பொதுவாக வரையறுத்து வைத்திருக்கிறது. உயரம், நிறம், முக அமைப்பு, கண்கள், மூக்கு, உதடுகள், உடல் வாகு, மெல்லிடை, பிற உடல் உறுப்புகள் போன்றவற்றை வைத்துத்தான் இந்தச் சமுதாயம் பெண் அழகை வரையறுக்கிறது. இவற்றிலும் அனைவரது கருத்தும் ஒத்துப்போவதில்லை என்றாலும், பொதுவான சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. திரைப்படங்களில் நடிக்கும் சில பெண்கள் அழகு எனப் பலராலும் கொண்டாடப்படுவதை வைத்துச் சமுதாயத்தின் அளவுகோல்களை நம்மால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும்.

கேரளப் பெண்கள் தமிழ்த் திரையுலகில் கோலோச்சுகிறார்கள். அவர்கள் அழகிகளாகப் போற்றப்படுகிறார்கள். இந்தப் போக்கையும் இப்போது நடக்கும் விவாதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒருவிதத்தில், திரைப்படங்கள் முன்னிறுத்தும் அழகே இதுபோன்ற விவாதத்துக்கு அடிப்படை என்றும் சொல்லலாம். ஆனால், திரைப்படங்கள் முன்னிறுத்தும் அழகு என்பது எத்தகையது? ஒரு நடிகை சொல்வதைக் கேளுங்கள்:

“நீ ஏன் நான் ஒரு திரையுலக நாயகியைப் போல மின்னவில்லை என்று பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிறபோதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.”

இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர். இந்த நாட்டின் சாமானியப் பதின் பருவப் பெண்ணைப் பார்த்து அவர் இவ்வாறு கூறுகிறார். சென்ற ஆண்டில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் சொல்வதைக் கேளுங்கள்:

“ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவம் கிடக்கிறேன். 3 - 6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் பிறைநிலா போல வளைக்கப்படுகின்றன. என் மேனி முழுவதும் ஒப்பனை பூச்சுக்கள் நிறைத்து மூச்சடைக்க வைக்கின்றன” என்கிறார் சோனம்.

அது மட்டுமல்ல. “காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சமயங்களில் படுக்கப்போவதற்கு முன்னும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் அணிவதற்கு உரிய கவர்ந்து இழுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்யவே ஒரு குழு இருக்கிறது. இவ்வளவு போராடியும், ‘மாசற்ற’ முழு அழகு சமயங்களில் வெளிப்படுவதில்லை. போட்டோஷாப் புண்ணியத்தில் நான் பேரழகியாகப் படைக்கப்படுகிறேன்” என்று போட்டு உடைக்கிறார்.

“என்னை அழகியாகக் காட்ட ஒரு பெரும் படை, எக்கச்சக்க பணம் தேவைப்படுகிறது. ஒரு திரை நாயகியை கனவுக்கன்னி போலக் காட்சியளிக்க வைக்கப் பல மணி நேரங்கள் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அது உண்மையில்லை. எங்களைப் போல அழகியாக வேண்டும் என்று கனவு காண வேண்டாமே! நம்பிக்கை மிளிர்பவராக ஆக ஆசைப்படுங்கள். அழகாக, கவலைகள் அற்றவராக, ஆனந்தம் மிக்கவராக இருக்க ஆசைப்படுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கவலையில்லாமல் கம்பீரமாக வாழுங்கள்” என சோனம் கபூர் இளம் பெண்களுக்குக் கூறியுள்ளார்.

அழகை ரசிப்பதிலோ, ஆராதிப்பதிலோ தவறில்லை. சொல்லப்போனால் அது இயல்புதான். அழகுணர்ச்சி என்பது நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். ஆனால், அழகுணர்ச்சி, ரசனை என்பது வேறு; இரு தரப்பினரைப் பொது வெளியில் வைத்து ஒப்பிட்டு எடைபோடுவது என்பது வேறு.

அழகு, அதிலும் திரைகளில் ஜொலிக்கும் அழகு என்பது மிகைப்படுத்தப்பட்டது. இயல்பான அழகாக இருந்தாலும் அது பெரிதும் இயற்கையின் கையில்தான் இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொள்பவர்கள் அழகை விவாதப் பொருளாகக் கருத மாட்டார்கள். மாயையான அழகையும் தேட மாட்டார்கள்.

விவாதத்தில் ஆரோக்கியமான பல விஷயங்கள் முன்வைக்கப்படலாம். அழகை வைத்துப் பெண்களை மதிப்பிடாதீர்கள் என்னும் கருத்தும் வெளிப்படலாம். ஆனால், இரு மாநிலத்துப் பெண்களின் அழகை ஒப்பிடும் இந்த விவாதப் பொருள் அடிப்படையிலேயே பிரச்னைக்குரியது. அழகு என்பது முகத்தில் இல்லை, உள்ளத்தில் இருக்கிறது என்று வாய் வலிக்கச் சொல்வோம். ஆனால், பெண் அழகு என வரும்போது நடுக் கூடத்தில் வைத்து ரசித்து விவாதிப்போம். இந்த முரண்பாடுதான் இந்த விவாதப் பொருளில் மிகுந்த கண்டனத்துக்குரியது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon