மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை மாநாடு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை மாநாடு!

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கடலூரில் நேற்று (அக்டோபர் 21) கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக் கோரும் உரிமை மாநாடு வரும் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்... “சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) இதில் திராவிடர் கழக தோழர்கள் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்கள். சாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமாக - கோயில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டத்தைத் தந்தை பெரியார் 1969இல் அறிவித்தார்.

தந்தை பெரியார் அறிவிப்பினை ஏற்று திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்டம் இயற்றப்பட்டது. திமுக, அஇஅதிமுக ஆட்சிக் காலகட்டங்களில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் எஸ்.மகராஜன், என்.கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே.ராஜன் ஆகியோர் தலைமையில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகமத் தடைகள் ஏதும் இல்லை; அர்ச்சகர்களுக்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்று நீதிபதிகள் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினர்.

ஆனாலும் உயர்சாதி ஆதிக்கவாதிகள், பார்ப்பனர்கள், ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், பரம்பரை அர்ச்சகர் முறை கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குக் கழகத்தின் சார்பில் உரிய காலத்தில் அவ்வப்போது கடிதம் எழுதப்பட்டும் அரசு அதைச் செயல்படுத்த முன்வராதது கெட்ட வாய்ப்பேயாகும்.

இதற்கிடையே கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் 36 பேரைக் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்து சாதனைச் சரித்திரத்தில் முத்திரை பதித்துள்ளது பாராட்டுக்குரியதாகும். இந்த அடிப்படையிலாவது தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும்.

இதை வலியுறுத்தும் வகையில், சாதி ஒழிப்புக்காக 1957இல் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபட்ட நவம்பர் 26ஆம் நாளன்று (26.11.2017) சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சியினரும், சமூக இயலாளர்களும் இதில் ஒத்தக் கருத்துள்ள, சமயத்தைச் சார்ந்த பெருமக்களும் பங்கேற்கும் ஒரு மாபெரும் மாநாட்டினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இந்த வகையில் மாநாடுகளை நடத்தவும் தீர்மானிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. இறுதி மற்றும் இருபதாவது தீர்மானமாக, “திமுக தலைவர் கருணாநிதி படிப்படியாக உடல்நலன் மேம்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். அவர் முழு உடல்நலன் பெற்று, மீண்டும் தன் தொண்டினைத் தொடர வேண்டும் என்பதே தமிழ்ப் பெருமக்களின் மிகப்பெரிய வேட்கையாகும். விரைவில் அவர் முழு நலன்பெற இப்பொதுக்குழு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon