மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

வடகொரியாவுடன் வர்த்தகத் தடை!

வடகொரியாவுடன் வர்த்தகத் தடை!

தெற்காசிய தீபகற்பத்தின் முக்கிய விவாதத்தை ஏற்படுத்திவரும் வடகொரியாவின் அணு ஆயுதம் பற்றிய சர்ச்சைகளால் உலக நாடுகளிடையே அதிருப்தி நிலவும் சூழலில் வடகொரியாவுடன் சில பொருள்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி.ஜி.எஃப்.டி) தடை விதித்துள்ளது.

இதுகுறித்து டி.ஜி.எஃப்.டி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரடி மற்றும் மறைமுக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வடகொரியாவில் இருந்து செய்யப்படுவது தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையின்படி சில குறிப்பிட்ட பொருள்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விநியோகம் அல்லது விற்பனை உள்ளிட்ட எந்தப் பரிவர்த்தனையும் வடகொரியாவுக்கு மேற்கொள்ளக் கூடாது.

இதன்படி, இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் கச்சா எண்ணெய் போன்றவற்றை வடகொரியாவுக்கு ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்வது தடை செய்யப்படுகிறது. மேலும் கடல்சார் உணவுப் பொருள்கள், ஜவுளிப் பொருள்கள் போன்றவையும் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தகமும் கடந்த ஆண்டே பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் இருநாட்டின் வர்த்தகமும் 133.43 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 198.78 மில்லியன் டாலராக இருந்தது.

மேலும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி உலக நாடுகளிலேயே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவிடமே மிகக்குறைவான அளவில் அணு ஆயுதம் உள்ளது. வடகொரியாவிடம் 60 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது. ரஷ்யாவிடம் 7,000 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 6,800 அணு ஆயுதங்களும் உள்ளது. இந்தியாவிடம் 130 அணு ஆயுதங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon