மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: மோடியின் ராணுவ தீபாவளி!

சிறப்புக் கட்டுரை: மோடியின் ராணுவ தீபாவளி!

களந்தை பீர் முகம்மது

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின், ஒவ்வோர் ஆண்டின் தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிவருவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். நாட்டின் ஏதோ ஓர் எல்லைப் பகுதிக்குச் செல்வதும் ராணுவத்தினருடன் கைகுலுக்கி அவர்களைப் பாராட்டுவதுமாக இப்போக்கு தொடர்கிறது. இந்த ஆண்டு அவர் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடும் தருணத்தைத் தனது குடும்பத்தாருடன் அதைக் கொண்டாடும் சூழலாக வர்ணித்திருக்கிறார் மோடி. இது அவர்களின் உற்சாகத்தைப் பெருக்கக் கூடும். முதல் ஆண்டு அவர் சியாச்சின் எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு ஆண்டுதோறும் செல்கிறார். குரேஸ் பகுதிக்கு அடுத்து உத்தராகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதிக்கும் செல்லும் திட்டம் அவருக்கு உண்டு.

மோடி இவ்வாறாக ஒவ்வொரு தீபாவளியின்போதும் எல்லைக்குச் சென்று வருவதையும் அவர் அங்கு பேசுவதையும் இதுவரை எந்தக் கட்சியும் தலைவரும் பெரிய அளவில் கண்டிக்கவில்லை. மோடியைத் தீபாவளியோடும் அங்கு அவர் செய்யும் உரையாடலோடும் இணைத்துக் கண்டிப்பது உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்குச் சிரமமான பணிதான். அவரும் பாஜகவினரும் இதனை உடனடியாக தேசபக்தியுடனும் நேரடியான வகுப்புவாதத் தன்மையுடனும் சம்பந்தப்படுத்தி எதிர்க்கட்சிகளை வேட்டையாடிவிடுவார்கள். பாஜகவினர் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கையில் தீப்பொறி பறக்கும் விமர்சனங்கள் இருக்கும். எதிர்க்கட்சியினரைத் தேசத் துரோகிகளாகச் சுலபமாக மாற்றிவிடுவார் மோடி. ஊடக பலமும் பாஜகவுக்குச் சாதகமாயுள்ளது. ஆகவே, எதிர்க்கட்சிகள் பம்மிப்போய்க் கிடப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லை விஜயத்தில் குறைகாண முடியுமா?

எல்லா நாட்டுத் தலைவர்களும் தமது நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று வீர உரை ஆற்றுவது இயல்பானதுதான். ராணுவத்தினரின் மனக் குறைகளையும் கேட்டறிவதுண்டு. அது அவர்களை உற்சாகப்படுத்துவதையும் மறுக்க முடியாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் நாட்டின் அதிபருமான ஜீ-ஜின்-பிங்கூட அண்மையில் அந்த நாட்டின் எல்லைக்குச் சென்று வந்தார். ஆகவே, அதில் குறைகாண வேண்டிய நெருக்கடி நேராது. ஆனால், மோடியின் எல்லை விஜயத்தைப் பிற நாட்டின் தலைவர்களோடு ஒப்பிட முடியுமா?

முடியாது. இதுவரை அவர் நம்புதற்கு அரிய பிரதமராகவே செயல்பட்டுள்ளார். அவரின் வாக்குறுதிகளுக்கும் அவரின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது. அவர் ஆட்சியின் சாதனைப் பட்டியல் என்ன ஆனது என்று இந்தியாவே தேட ஆரம்பித்துவிட்டது. அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் யாதொன்றின் இலக்கும் எட்டப்பட்டதாக பாஜகவாலும் சொல்ல முடியவில்லை. வேலையின்மை அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. பணமதிப்பழிப்பு, சரக்கு - சேவை வரி ஆகியன அவர் உருவாக்க நினைத்த இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளிவைத்திருக்கின்றன. கறுப்புப் பண வேட்டையாடலைப் பணமதிப்பழிப்பு நீக்கத்துக்குள் ஒளித்துவைத்தார். எல்லாப் பணமும் வங்கிகளுக்குத் திரும்பிய பின்னரும் மக்களுக்கு வாக்களித்த அந்தப் பதினைந்து லட்சம் எவருக்கும் வந்துசேரவில்லை. இவற்றையெல்லாம் படுதோல்வியின் வெளிப்பாடுகளென இந்தியா நினைக்கிறது.

ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்துக் கவலைப்பட்டுப் பேசுகிறார்கள். இப்போது இவர்களுடன் சர்வதேச அமைப்புகளும் இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்துக் கெட்ட சேதிகளை அனுப்பிவிட்டன. இவ்வாறான நெருக்கடிகளை வாய்விட்டு மக்கள் மத்தியில் பேச முடியாத நெருக்கடிக்கு மோடி ஆளாகியிருப்பது அவரின் துரதிர்ஷ்டம். அவரின் வீரச் சொல்லாடல்கள் அதே நிலையில் தென்பட்டாலும் மக்களிடம் விளக்கம் கொடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆருடங்களும் அலையாடல்களாகியுள்ளன. பாஜக மீண்டும் வெல்லும் என்கிற கனவு இரு மாதங்கள் முன்புவரை இருந்தது. ஆனால் நிலைமை இப்போது கடினமாகிவிட்டது. பணமதிப்பழிப்பு தமக்கு யாதொரு நன்மையும் செய்யாதது மட்டுமல்லாமல், இருப்பதையும் பறித்துவிட்டதைச் சகலரும் மனம் நொந்து பேசிவருகின்றனர். மோடியின் பல வாக்குறுதிகளுக்காக நாடும் தன்னைத் தியாகத் தீயில் புடம் போட்டுக்கொண்டது. கறுப்புப் பண ஒழிப்புக்காகத் தன் வயிற்றையும் கட்டிக்கொள்ள அது சித்தமானது. ஆனால், தொடர்ந்து கானல் நீர்தான் கண்ணில்படுகிறதே தவிர, ஆற்று வெள்ளம் புரளவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அவருக்கு எதிரான வியூகங்களைத் தன் தொழிற்சங்க அமைப்பை முன்வைத்துச் செய்துவருவது மோடிக்கு மிகப்பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது.

இந்தச் சூழலில் ராணுவத்தினருடன் மோடி தீபாவளி கொண்டாடுவது தேசபக்தச் சூழலை மட்டுமே தோற்றுவிக்காது. அவர் வேறு சமய சந்தர்ப்பங்களில் அங்கு சென்று வரக்கூடியவராக இருப்பாரேயானால் அதற்கொரு வர்ணம் தீட்டுவது சிரமமாக இருந்திருக்கும். நாட்டின் பெரும்பான்மைச் சமயத்தினரின் முக்கியப் பண்டிகையை ராணுவ வீரர்களுடனான சந்திப்பு நாளாகத் தேர்ந்தெடுப்பதும் பாகிஸ்தானை முக்கிய எதிரியாகக் கருதி அங்கு அவர் உரையாடலைத் தொடுப்பதும் வகுப்புவாதத் தன்மைக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. இது ஒரு தந்திரமான நடவடிக்கை. பாகிஸ்தானைச் சீண்டுவது அந்த நாட்டுடனான சீண்டலாக அமையாமல், வேறொரு பரிமாணத்தை எட்டுவதுதான் இங்கு இயல்பு.

கறுக்கும் வண்ணங்கள்

மோடி பிரதமரான பின்னர் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கருதியோ அதன் மரபார்ந்த எடுத்துரைப்புகளை முன்வைத்தோ தன்னைத் தனது மதவாத நோக்கத்துக்கு அப்பாற்பட்டவராக அவர் நிறுத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும். அண்மையில் நடந்துமுடிந்த உ.பி. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தீபாவளிப் பண்டிகைக்கும் நோன்புப் பெருநாளுக்குமான வேற்றுமைத் தொனியாகப் பிரித்துக் காட்டினார். அது வாக்காளர்களின் மத்தியில் சமயப் பாகுபாட்டுணர்வைப் பேரளவில் தோற்றுவித்தது; அவருடைய பிரசாரத்துக்கு வெற்றியையும் அளித்தது; வெற்றியென்றாலும் அது நாட்டின் உணர்வலைகளைப் பகுத்துப் பிரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கிறது. மோடி ஒரு பிரதமராக நாட்டின் வண்ணங்களின் கலவையைக் கறுப்பாகவே மாற்றுவதில் குறியாக இருக்கிறார்.

இதுபோன்ற அசம்பாவிதங்களால், சர்வதேச ரீதியாக இந்தியா போற்றப்பட்டுக்கொண்டிருந்த தன்மைக்கு சோதனை நேரிட்டுள்ளது. மோடியின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அவரின் பதவியின் கௌரவத்தைப் போற்றும் வகையில் அவர் தன்னை மதச்சார்பின்மையின் இசைவான இடத்தில் நிறுத்திக்கொள்ளத் தொடர்ந்து மறுக்கிறார். ஏதேனும் விவகாரத்தில் அவரின் தலையீடு எதிர்பார்க்கப்படும் தருணங்களில் அவர் உடனடியாகக் கருத்து சொல்லி நிலைமையின் பதற்றத்தைத் தணிப்பவராக இல்லை. மாட்டிறைச்சி விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்படும்வரை மோடி கடைப்பிடித்த மௌனம் கடும் போக்காகும். அதற்கு எதிர்வினையாற்றும் சமயங்களிலும் அதை மென்மையாகத்தான் முன்வைக்கிறார். இதற்கு மேல் தன்னால் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை வெளிப்படையாகவும் உணர்த்துகிறார். அதே தன்மையில் தீபாவளித் திருநாளில் ராணுவத்தைச் சந்திக்கும் போக்கினையும் அவர் கையாளக்கூடும் என்கிற எண்ணம் தோன்றாமலில்லை.

தான் நிராதரவாகக் கைவிடப்படும் சமயத்தில் அவர் என்ன செய்வார் என்று தெரியாது. ஆனாலும் எல்லா நிலைமைகளும் இயற்கைத் தன்மையுடன் கைகோத்திருப்பதால் மோடி அதனை மீறி வரும் சக்தியைப் பெறுவாரா இந்த அலைகளுக்குள் சிக்கி அவரும் உள்ளிழுத்துச் செல்லப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: களந்தை பீர் முகம்மது எழுத்தாளர், ஊடகவியலாளர், இஸ்லாமியச் சமூகம் குறித்து பரந்துபட்ட பார்வையுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் எழுதிவருபவர். திரைப்படம், இலக்கியம், அரசியல் குறித்தும் நுண்ணுணர்வுடன் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்து வருகிறார். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon