மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

இந்தியா - நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியா - நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 22) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் - தவான் ஜோடி நல்ல ஃபார்மில் இருப்பது கூடுதல் பலமாகும். இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் கோலி, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய சாஹல், குல்தீப் யாதவ் நியூசிலாந்துக்கு எதிராகவும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து-ஏ அணி, இந்தத் தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகாரபூர்வமற்ற 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ், ஜார்ஜ் வொர்கர் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கின்றனர். இந்திய போர்டு பிரசிடென்ட் அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் படுதோல்வியைச் சந்தித்த நியூசிலாந்து, அதன் பிறகு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் போராடி வெற்றி பெற்றது. பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய மண்ணில் அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்டில்,ராஸ் டெய்லர் இருக்கின்றனர். ஆல் ரவுண்டர் மிட்செல் சேன்ட்னர் அந்த அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் டிரென்ட் போல்ட், டிம் செளதி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பர்.

இந்தத் தொடர் குறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், “மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பையின்போது இரண்டு ஆட்டங்கள் ஆடியிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக தற்போதுதான் முதன்முறையாக இந்த மைதானத்தில் களம் இறங்க உள்ளோம். எங்கள் அணியில் இந்த முறை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். சொந்த மண்ணில் இந்தியா பலமான அணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பாகவே செயல்பட்டோம். கடைசி போட்டியில் தான் தொடரை இழந்தோம். இந்தத் தொடரில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்குச் சவால் அளிக்க எல்லா விதத்திலும் தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்

இந்தப் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரஹானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ் குமார், ஷ்ரத்துல் தாக்கூர்.

ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னே, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர், இஷ்க் சோதி, டாம் ப்ருஸ்.

சனி, 21 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon